ஷாப்பிங் மால் செல்லும் பெரியவர்களுக்கான வயது வரம்பு மாற்றியமைப்பு..!! 70 வயது வரையுள்ள பெரியவர்கள் செல்ல அனுமதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்கள் போன்ற பொது இடங்களில் 12 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களும் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்களும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீப காலமாக அமீரகத்தில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில , நேற்று (ஜூன் 17) துபாயில் இத்தடையை விலக்கி அனைத்து வயதினரும் இன்று (ஜூன் 18) முதல் ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்லலாம் என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது அமீரகத்தின் மற்ற பகுதிகளிலும் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கான வயது வரம்பானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், கூட்டுறவு சங்கங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் விளையாட்டு வசதிகள், அதே போல் மால்களுக்கு வெளியே உள்ள அனைத்து கடைகள் மற்றும் உணவகங்களுக்கும் செல்பவர்களின் வயது வரம்பினை 60 லிருந்து 70 வயதாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 12 வயது முதல் 70 வயது வரையிலான பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 12 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கான தடை நீக்கப்படவில்லை என்றும் அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கான தடை நீடிக்கும் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMAUAE) மற்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) ஆகியவை ஒன்றிணைந்து அறிவித்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
.@NCEMAUAE in collaboration with @mohapuae has announced that the age limit to enter shopping malls, cooperative societies, supermarkets & sports facilities, as well as all shops & restaurants outside malls, has been raised from 60 to 70. Children under 12 are still not permitted pic.twitter.com/b1IdgjHVoF
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) June 17, 2020