குழந்தைகள் ஜன்னல், பால்கனியிலிருந்து தவறி விழ பெற்றோர்களின் அலட்சியமே காரணம்..!! அபுதாபி காவல்துறையின் எச்சரிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பால்கனிகள் மற்றும் ஜன்னல்களில் இருந்து சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தவறி கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இவ்வாறு குழந்தைகள் இறந்துபோகும் சம்பவங்களுக்குப் பின்னால் பெற்றோரின் அலட்சியம் ஒரு முக்கிய காரணம் என்று அபுதாபி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்குரிய சரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க பெற்றோர்கள் தவறிவிடுவது அல்லது குழந்தைகளை எல்லா நேரங்களிலும் பெற்றோர்களால் கவனிக்க இயலாமல் போவது போன்ற காரணங்களே இதுபோன்ற விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது போன்ற விபத்துகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க ஜன்னல்களில் போதிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவவும், பால்கனிகளை பெற்றோர்கள் பயன்படுத்தாத நேரங்களில் பூட்டி வைக்குமாறும் பெற்றோர்களை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பால்கனியை பூட்டி அதன் சாவியை குழந்தைகள் அடைய முடியாத பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
குழந்தைகள் வைத்திருக்கும் விளையாட்டு பொருட்களை ஜன்னல் மற்றும் பால்கனிகளுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இவ்வாறு வைக்கும் போது ஆர்வமுள்ள குழந்தைகள் தங்களின் விளையாட்டு பொருட்களை எடுக்கும் போது ஜன்னல் மற்றும் பால்கனிக்கு வெளியே எட்டி பார்க்கும் அபாயம் உள்ளது என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் குழந்தைகளை பால்கனி மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் விளையாட விடக்கூடாது என்றும், வீட்டிலுள்ள குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோரின் பொறுப்பு, ஒரு கணம் அலட்சியம் என்பது பேராபத்திற்கு வழிவகுக்கும் என்றும் காவல்துறையினர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் கடந்த மே மாதத்தில், துபாயில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் தனது சகோதரருடன் கால்பந்து விளையாடியதாகக் கூறப்படும் 12 ஆம் வகுப்பு மாணவர் பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததையும், அதற்கும் முன்னதாக மார்ச் மாதத்தில், ஷார்ஜாவில் உள்ள தனது குடியிருப்பின் 11 வது மாடியில் இருந்து ஆறு வயது ஆட்டிஸ்டிக் சிறுவன் திறந்த ஜன்னல் அருகே வைத்திருந்த நாற்காலியில் ஏறியதில் தவறி கீழே விழுந்து உயிரிழந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டு வருவதால் மிகவும் சிரத்தையுடன் தங்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ளுமாறும் பெற்றோர்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.