அஜ்மான் : வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் மீண்டும் தொடக்கம்..!! நகராட்சி அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அமீரகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு, சமீபத்தில் அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் வரும் ஜூலை மாதம் முதல் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது அஜ்மானிலும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலமாக, கொரோனாவின் பரவலையொட்டி அமீரகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அஜ்மான் நகராட்சி மற்றும் திட்டமிடல் துறையானது வரும் ஜூன் மாதம் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் முறையான பார்க்கிங் விதிகளை கடைபிடிப்பதை உறுதிசெய்து, வாகனங்களை நிறுத்துவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதையும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பார்க்கிங் இடங்களை மற்ற வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதில்லை என்பதையும் ஆய்வுக் குழுக்கள் தொடர்ந்து உறுதி செய்யும் என்று அஜ்மான் நகராட்சியின் உள்கட்டமைப்பு துறையின் நிர்வாக இயக்குனர் முகமது பின் ஒமைர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பார்க்கிங் கட்டணம் செலுத்தும் சாதனங்கள் அவ்வப்போது சுத்திகரிப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வாகன ஓட்டிகள் முடிந்தவரை ஸ்மார்ட் அப்ளிகேஷன் அல்லது SMS மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துமாறும் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe