சவூதி அரேபியா முழுவதும் ஊரடங்கு நாளை முதல் தளர்வு..!! அனைத்து வணிக நடவடிக்கைகளும் செயல்பட அனுமதி..!!
சவூதி அரேபியாவில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், நாளை ஜூன் 21 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் அந்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் (மக்கா, ஜித்தா உட்பட) விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதும் நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கைகளுடன் முழுவதுமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உம்ரா எனும் புனிதப்பயணம் மற்றும் சர்வதேச விமான சேவைகள் ஆகியவற்றிற்கான தடை நீடிக்கும் என்றும் தரை வழி, கடல் வழி போக்குவரத்து வழியாக நாட்டிற்குள் நுழையவும் வெளிச்செல்லவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, 50 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பொது இடங்களில் செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே மக்காவில் இருக்கக்கூடிய அனைத்து மசூதிகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நாளை முதல் திறக்கப்படும் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா : மக்காவில் மூடப்பட்டிருந்த அனைத்து மசூதிகளும் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!