COVID-19 : 90 மருத்துவர்களுக்கு புதியதாக கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு..!! மருத்துவ ஊழியர்கள் பெருமிதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், கடந்த மே மாதத்தில் கொரோனாவை எதிர்த்து முன்னின்று போராடும் துபாய் சுகாதார ஆணையத்தின் 212 வெளிநாட்டு சுகாதார ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான ‘கோல்டன் விசா’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி அவர்கள் அனைவர்க்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 212 மருத்துவர்களுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியிருந்த நிலையில், தற்பொழுது புதியதாக துபாயை மையமாக கொண்ட அல் ஜலீலா மருத்துவமனையை சார்ந்த 90 மருத்துவர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக அல் ஜலீலா குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் 90 மருத்துவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளதை அல் ஜலீலா மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அல் ஜலீலா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அப்துல்லா அல் கயாத் கூறியதாவது, “எங்கள் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட இந்த செயலுக்காக அரசுக்கு நன்றி. இந்த செயலானது கோல்டன் விசா பெற்ற மருத்துவர்களுக்கான பாராட்டு மட்டும் அல்ல. ஜலிலா குழந்தைகள் மருத்துவமனை மற்றும் துபாயின் ஒட்டுமொத்த மருத்துவமனையிலும் உள்ள ஒவ்வொரு மருத்துவ குழு உறுப்பினர்களுக்கான பாராட்டு. இத்தகைய பாராட்டு எங்கள் இளம் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிக உயர்ந்த தரமான சிகிச்சையை வழங்குவதற்கும், அயராது உழைக்கவும் தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் மற்றும் ஒரே குழந்தை மருத்துவமனையான அல் ஜலீலா குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை, 18 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கோல்டன் விசா என்பது அமீரகத்தில் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் போன்ற முக்கிய துறைகளில் பங்களிக்க கூடிய வெளிநாட்டவர்களுக்கு அமீரக அரசால் வழங்கக்கூடிய 10 ஆண்டுகளுக்கான விசா என்பது குறிப்பிடத்தக்கது.