அபுதாபியில் மீண்டும் திறக்கப்பட இருக்கும் பள்ளிகள்..!! ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் தாக்கத்தை முன்னிட்டு கடந்த நான்கு மாதங்களாக பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் தங்களின் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வந்த நிலையில், அபுதாபியில் அடுத்த கல்வியாண்டு ஆரம்பிக்க இருப்பதை முன்னிட்டு, பள்ளிகளுக்கு சென்று வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு அபுதாபியின் கல்வி மற்றும் அறிவுத் துறை (Abu Dhabi Department of Education and Knowledge, ADEC) அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதம் முதல் அபுதாபியில் இருக்கும் மாணவர்கள் பள்ளிகளில் கல்வியை தொடர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு செப்டம்பர் மாதம் தொடங்குவதையொட்டி, அபுதாபியில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரிவான வழிகாட்டுதல்களை ADEC வெளியிட்டுள்ளது. மேலும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு திரும்புவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ADEC அபுதாபியில் இருக்கும் பள்ளிகளுக்கு அறிவித்துள்ள வழிமுறைகளில், “அபுதாபியில் உள்ள அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் பள்ளி வளாகத்திற்குத் திரும்புவதற்கு முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான அட்டவணைகள் மற்றும் செயல்முறை தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
அனைத்து ஊழியர்களும், பெற்றோர்களும், மாணவர்கள் அல் ஹொசன் (Al Hosn) அப்ளிகேஷனை டவுன்லோடு செய்திருக்கும் சாதனத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு வேலை எவருக்கேனும் கொரோனா இருப்பது சந்தேகிக்கப்பட்டால் அந்நபரை தொடர்ந்து கண்காணிக்க இது உதவி புரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் தங்களின் சமீபத்திய பயண வரலாற்றை தெரிவிக்க வேண்டும் என்றும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மேசைக்கும் ஷீல்டு (shield) பொருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.