கார்டன், தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு குடை, குளிர்பானங்கள் வழங்கும் அபுதாபி முனிசிபாலிடி..!! பணியாளர்களின் நலனிற்காக புதிய முயற்சி தொடக்கம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய கோடைகாலங்களில் நேரடியாக சூரியனுக்கு கீழே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நண்பகல் 12 .30 மணி முதல் 3 மணி வரையிலும் மதிய இடைவேளை (Mid Day Break) வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடமும் கடந்த ஜூன் மாதம் 15 ம் தேதி முதல் அமீரகம் முழுவதும் மதிய இடைவேளை அமலில் இருந்து வருகின்றது.
வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில், சூரிய ஒளியில் நேரடியாக தெருக்களையும் (Streets) தோட்டங்களையும் (Garden) சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் வெப்பத்தைத் தணிக்கவும், அவர்களின் நலனில் அக்கறை கொண்டும் அபுதாபி முனிசிபாலிடி “சுக்யா (Suqya)” என பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த புதிய முயற்சியின் வாயிலாக, வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் குளிர் பானங்கள் மற்றும் குடைகளை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அபுதாபி முனிசிபாலிடி அறிவித்துள்ளது.
அபுதாபி முனிசிபாலிடி இந்த புதிய முயற்சியை பொது மகளிர் சங்கத்துடன் (General Woman Union-GWU) இணைந்து தொடங்கியுள்ளதாகவும், மேலும் இது அபுதாபியில் திறந்த வெளியில் பணிபுரியும் சுமார் 1,500 தூய்மை பணியாளர்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் இறுதி வரையிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் மேற்கொள்ளப்படும் நேரங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், அபுதாபியின் நகர்ப்புற திட்டமிடல் துறையானது, கட்டுமான இடங்களில் தொழிலாளர்களுக்கு கோடைகால பாதுகாப்பு பட்டறை (workshop) ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அபுதாபி முனிசிபாலிடி தெரிவித்துள்ளது. அமீரகத்தின் மனிதவள, எமிரேடிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation) மற்றும் தேசிய வர்த்தக மற்றும் வளரும் நிறுவனங்கள் (National Trading and Developing Enterprises-NTDE) மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடத்தப்படும் வெப்ப அழுத்த பிரச்சாரத்தின் (Heat Stress Campaign) ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் முனிசிபாலிடி சார்பாக கூறப்பட்டுள்ளது.
வெளிப்புற தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளையை அமல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முனிசிபாலிடி தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 15 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15 வரையிலான காலங்களில் மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் பணிபுரிய அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு, ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 50,000 திர்ஹம்ஸ் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்றும், விதி மீறலைப் பொறுத்து நிறுவனங்களின் செயல்பாடுகள் முழுவதுமாக இடைநிறுத்தப்படும் அல்லது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் எனவும் அபுதாபி முனிசிபாலிடி எச்சரிக்கை விடுத்துள்ளது.