VBM-4 : அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து செல்லும் நடவடிக்கையின் நான்காம் கட்டத்தில் கூடுதலாக 18 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசானது ஜூலை 12 ம் தேதி முதல் 26 ம் தேதி வரையிலான நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டத்தை தொடர்ந்து, அமீரகத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு இயக்கப்படும் விமானங்கள் மூலம் இந்தியாவில் சிக்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்களும் அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் விமானங்களும் இந்தியாவில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களை திருப்பி அழைத்து வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்ட கூடுதல் விமானங்களில் 10 விமானங்கள் ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இயக்கப்படுவதாகவும் மீதமுள்ள 8 விமானங்கள் ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக அறிவிக்கப்பட்ட விமானங்களில் மூன்று விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களும் தமிழகத்தில் இருக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிக்க விரும்புபவர்கள் நேரடியாக ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அமீரகத்தில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.