அமீரக செய்திகள்

UAE : 186 இந்திய தொழிலாளர்களை இலவசமாக தாயகம் அனுப்பி வைத்த தொழிலதிபர்..!!

கொரோனாவின் தாக்கத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல நபர்கள் வேலையிழந்து, உணவின்றி சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில், அமீரகத்தில் சிக்கி தவித்த 186 இந்திய தொழிலாளர்களை இரண்டு சார்ட்டர் விமானங்களின் மூலமாக டிக்கெட் ஏதுமின்றி இலவசமாக அமீரகத்தில் இருக்கும் அல் ஆதில் டிரேடிங்கின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் தனஞ்சய் தாதர் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் ஊடகத்திற்கு தெரிவித்த செய்தியில், 186 தொழிலாளர்களில் 98 தொழிலாளர்கள் புனேவுக்கு எமிரேட்ஸ் சார்ட்டர் விமானத்தின் மூலமும், 88 பேர் கடந்த வாரம் மும்பைக்கு ஃப்ளைதுபாய் சார்ட்டர் விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் ஏற்கெனவே சில உதவி செய்யும் நல் உள்ளங்களுடன் இணைந்து அமீரகத்தில் சிக்கி தவித்த 1,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு உண்டான விமான டிக்கெட்டுகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் கூறுகையில், “நான் அமீரகத்தில் சிக்கி தவித்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளேன். தற்பொழுது, எனது சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவில் இருந்து அமீரகத்தில் சிக்கியிருக்கும் வேலைகளை இழந்த தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதற்கு நான் நிதியுதவி செய்ய விரும்பினேன்”.

“ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் அந்தத் தொழிலாளர்களை திருப்பி அனுப்ப சில நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் மகாராஷ்டிரா செல்லும் விமானங்களில் மிகக் குறைவான திருப்பி அனுப்பும் விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “வேலையின்மை அல்லது 2,000 திர்ஹமிற்கும் குறைவாக சம்பளம் பெறும் நபர்களில் இருந்து இலவச டிக்கெட்டுகள் வழங்க இருக்கும் நபர்களை தேர்ந்தெடுக்க ஒரு பதிவு செயல்முறை (Registration process) மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் மிகவும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலான பணியாக இருந்தது. அவர்களில் மிகவும் அவசிய தேவையுடைய தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்களின் தொழிலாளர் ஒப்பந்தங்களை நாங்கள் சரிபார்த்தோம்”

“சில தொழிலாளர்கள் தங்களுடைய பாஸ்போர்ட்டுகள் அவர்களிடம் இல்லை என்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். எனவே நான் அவர்களின் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு அவர்களின் பாஸ்போர்ட்களை நான் அவர்களின் டிக்கெட்டுகளுக்கு நிதியுதவி செய்து தாயகத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் அவர்களின் பாஸ்போர்ட் வேண்டும் என்றும் கூறி அவர்களின் பாஸ்போர்ட்களை வாங்கினேன். பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டுகளை சேகரிக்க என் அலுவலகத்திற்கு வந்த தொழிலாளர்கள் தாயகம் திரும்புவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் ” என்றும் கூறியிருந்தார்.

டாக்டர் தாதர் அவர்கள் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு நிதியுதவி செய்தாது மட்டுமல்லாமல், அவர்களின் கொரோனா பரிசோதனை மற்றும் உணவு பொருட்களுக்கும் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இறுதியாகக் கூறுகையில், “துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் பல மக்கள் நல சங்கங்களின் ஆதரவு இந்த பணியை தடையின்றி செயல்படுத்த எனக்கு உதவியது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இக்கட்டான சூழ்நிலையை கடக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!