அமீரக செய்திகள்

UAE: 3 மாதம் வேலையின்றி இறுதியாக இந்தியா செல்லவிருந்தவர் விமான நிலையத்தில் மரணம்..!! மகனின் கல்விச்செலவை ஏற்ற VPS ஹெல்த்கேர் நிறுவனம்..!!

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்த தனது மகனை வாழ்த்துவதற்காக அமீரகத்தில் இருந்து இந்தியா பயணிக்கவிருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பவித்ரன் மஞ்சக்கல் (வயது 50) என்ற நபருக்கு சுமித்ரா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் தனுஷா, தமண்யா மற்றும் தனூப் என்ற மகனும் உள்ளனர். தனது மகன் 10 ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்ததை தொடர்ந்து மகனை வாழ்த்துவதற்காக இந்தியா செல்ல காத்திருந்த பவித்ரன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது பற்றி சேதானா RAK என்ற சமூக அமைப்பின் உறுப்பினர் ஷாஜி கயகோடி கூறுகையில், “செவ்வாயன்று கேராளாவில் வெளியிடப்பட்டிருந்த பள்ளிகளின் தேர்வு முடிவில் தனது மகன் அனைத்து பாடங்களிலும் “A+” பெற்று இருந்ததை எண்ணி அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தனது மகனுக்கு பரிசாக ஒரு மொபைல் போனை வழங்க முடியாமல் போனது குறித்து வருத்தமாக இருந்தார். இந்நிலையில், அவர் தனது வீட்டிற்கு சென்றடைவதற்கு சிறிது நேரங்களுக்கு முன்னரே இறந்துள்ள இந்த நிகழ்வானது வார்த்தைகளால் சொல்ல முடியாத சோகத்திற்கு அப்பாற்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் கூறுகையில், “அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது வேலையை இழந்துவிட்டார். அதனால் எங்கள் அமைப்பின் மூலமாக நாங்கள் அவரை கேரளாவிற்கு திருப்பி அனுப்ப முயற்சித்தோம். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் இந்தியாவிற்கு செல்வதற்கான விமானத்தின் பயண டிக்கெட்டிற்கான பணத்தை நாங்கள் வழங்கி அவருக்கு உதவினோம். பயணம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் செவ்வாய்க்கிழமை ராஸ் அல் கைமாவிலிருந்து தனி விமானம் மூலம் கேரளாவிற்கு செல்லவிருந்தார். விமானம் இரவு 11.30 மணிக்கு புறப்பட இருந்த வேளையில், பவித்ரன் மாலை 6.30 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தார்” என்றும் கயகோடி கூறினார்.

கயகோடி தொடர்ந்து கூறும் போது “விமான நிலையத்தை அடைந்தபின் அவர் என்னை அழைத்திருந்தார். நான் அவரிடம் விடைபெற வாகன நிறுத்துமிடத்தில் கூட காத்திருந்தேன். அவர் எனது அழைப்புகளை எடுக்காததால் நான் விமான நிலையத்தில் இருந்து திரும்பி சென்று விட்டேன். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவர் விமான நிலையத்தில் இறந்துவிட்டதாக இரவில் தான் கேள்விப்பட்டேன்”.

“அவர் இறந்த செய்தி அறிந்ததும் இந்தியாவில் அவரின் வருகையை எதிர்பார்த்து விமான நிலையத்தில் காத்திருக்கும் நண்பர்களிடம் வீட்டிற்கு திரும்பி செல்லுமாறு கூறினேன். அதற்கு அவர்கள் பவித்ரனை கேரளாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து வரவேற்பதற்காக விமான நிலையம் செல்ல வேண்டியதையொட்டி அவரது மனைவி கடன் வாங்கியதாகவும், அவரை தற்பொழுது சமாதானப்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்” என்றும் கூறினார்.

இந்நிலையில், ராஸ் அல் கைமா விமான நிலையத்தில் இறந்த பவித்ரன் மஞ்சக்கலின் குடும்பத்தை ஆதரிக்க ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபலமான VPS ஹெல்த்கேர் நிறுவனம் முன்வந்துள்ளது. கேரள வாரிய தேர்வில் (Kerala Board Exam) சிறந்து விளங்கிய பவித்ரனின் மகனின் கல்விக்கு நிதியுதவி அளிப்பதாக VPS ஹெல்த்கேர் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஷம்ஷீர் வயலின் தெரிவித்துள்ளார்.

பவித்ரனின் துயர மரணம் குறித்து அறிந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக VPS ஹெல்த்கேர் (இந்தியா) இயக்குனர் ஹபீஸ் அலி உல்லத் தெரிவித்தார். “தனூப்பின் கல்விச் செலவுகளை ஏற்றுக் கொண்டு பவித்ரனின் குடும்பத்தை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இனி அவர் தான் குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் அவர் நன்றாக படிப்பவராக இருக்கிறார். அவரை ஆதரிப்பதன் மூலம், அது குடும்பத்திற்கு ஒரு நிவாரணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். துயரமடைந்த குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உடனடி நிவாரணமாக, VPS ஹெல்த்கேர் ரூ .500,000 தொகையை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!