தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் அரபு நாடுகளில் முதல் இடம் பிடித்த அமீரகம்..!! ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில் தகவல்..!!
உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் 2020 கணக்கெடுப்பின் (UN E-Government Survey 2020) படி, தொலைதொடர்பு உள்கட்டமைப்பு குறியீட்டில் (Telecommunication Infrastructure Index – TII) ஐக்கிய அரபு அமீரகம் அரேபிய பிராந்தியத்தில் முதலிடத்தையும், ஆசிய நாடுகளில் இரண்டாவது இடத்தையும், உலகளவில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு துறையின் உலகளாவிய போட்டித்திறன் குறியீடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் தொலைதொடர்பு தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஐக்கிய அரபு அமீரகம் மொபைல் சந்தா குறியீட்டில் உலகளவில் 1 வது இடத்தை பிடித்துள்ளதாகவும், மொபைல் பிராட்பேண்ட் இணைய சந்தா குறியீட்டில் உலகளவில் 2 வது இடத்திலிருந்து 1 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள பயன்பாட்டாளர்களின் குறியீட்டைப் பொறுத்தவரை உலகளவில் 13 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேபோல் நிலையான பிராட்பேண்ட் சந்தா குறியீட்டில் உலகளவில் 68 வது இடத்திலிருந்த ஐக்கிய அரபு அமீரகம் தற்போது 29 வது இடத்திற்கு முன்னேறியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த சாதனைகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) மற்றும் அமீரகத்தின் மொபைல் ஆபரேட்டர்கள் எடிசலாட் (Etisalat), டு (Du) தலைமையிலான TII நிர்வாகக் குழுவின் முயற்சியின் விளைவாகவும், கடந்த ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட பல புதிய முயற்சிகளின் மூலமாகவும் உலகளவில் தொலைதொடர்பு உள்கட்டமைப்பு குறியீட்டில் (TII) ஐக்கிய அரபு அமீரகம் சிறந்த இடத்தை பிடித்துள்ளதாக ஸ்பெக்ட்ரம் விவகாரத் துறையின் நிர்வாக இயக்குநரும், TII நிர்வாக குழுத் தலைவரும், TRA இன் தேசிய நிகழ்ச்சி நிரல் குழுவின் தலைவருமான தாரிக் அல் அவாதி கூறியுள்ளார்.
இது குறித்து தாரிக் அல் அவாதி மேலும் கூறுகையில், “தொலைதொடர்பு துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த பங்களிக்கும் திட்டங்களையும் உத்திகளையும் TRA உருவாக்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் விஷன் 2021 மற்றும் தேசிய நிகழ்ச்சி நிரல் இலக்குகளை அடைவதில் தொலைத்தொடர்புதுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டில் தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் 36 பில்லியன் டாலர் வரை உள்கட்டமைப்பு முதலீட்டிற்கு ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்கட்டமைப்பை ஃபைபர் சேவைகள் மற்றும் ஒட்டுமொத்த கவரேஜ் அடிப்படையில் உலகின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு துறையில் 5 ஜி நெட்வொர்க்குகளைத் தொடங்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஐக்கிய அரபு அமீரகம் அரேபிய பிராந்தியத்தில் 1 வது இடத்தையும், உலகளவில் 4 வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் மின்-அரசு மேம்பாட்டு குறியீடு (EGDI) குறித்து ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள ஆன்லைன் சேவைகள் குறியீட்டில் (OSI) உலகளவில் 8-வது இடத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.