அமீரக செய்திகள்

அமீரகத்தில் தேவாலயம் கட்டுவதற்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் நன்கொடை அளித்த லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலி..!!

அமீரகத்தில் உள்ள ஒரு பழமையான தேவாலயத்தை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு, அமீரக தொழிலதிபரும், லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுஃபலி M.A அவர்கள் சுமார் 1 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அபுதாயில் உள்ள பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் கதீட்ரல் எனும் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள், கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டதாகவும், இது அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கட்டிடத்தின் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் கட்டிடத்தின் அடிப்படைக் கட்டமைப்பை முடித்துவிடுவோம் என்றும், ஏப்ரல் அல்லது மே 2024க்குள் முழு வேலையும் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த தேவாலயத்தில் இருக்கும் ஃபாதர் பால் கூறப்பட்டுள்ளது.

இவ்வேளையில், அமீரக தலைமை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தேவாலயத்திற்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, புதிய கட்டிடத்தில் பிரார்த்தனை சேவைக்காக 2,000 பேர் வரை தங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். திருச்சபையில் 1,800 குடும்பங்கள் உறுப்பினர்களாகவும், 6,000 பேர் வரை பின்பற்றுபவர்களாகவும் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த பழம்பெரும் செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயமானது, கடந்த 1970 ஆம் ஆண்டில், அமீரகத்தின் ஸ்தாபன தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள், கலீதியா பகுதியில் தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டிய வரலாறும் உண்டு. இதனையடுத்து, 1983 இல், தேவாலயம் முஷ்ரிஃப் பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, 2004 இல், தேவாலயம் ஒரு கதீட்ரலாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, சுமார் 39 ஆண்டுகள் பழமையான தேவாலயமாக திகழ்ந்த கட்டிடம் கடந்த ஆண்டு செப்டம்பரில் இடித்து தகர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பரிலேயே புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்போது, புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மண்டபத்தில் வழக்கமான சேவைகள் நடைபெறு வதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 25 மில்லியன் திர்ஹம் செலவில் உருவாகவுள்ள தேவாலயம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, தற்போது சேவைகள் நடைபெற்று வரும் புதிய மண்டபத்தை கட்டுவதற்கு 10 மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில், கதீட்ரலுக்கான புதிய கட்டிடத்திற்கு 15 மில்லியன் திர்ஹம் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு இருக்கையில், தொழிலதிபர் யூசுஃப் அலி தக்க சமயத்தில் வழங்கிய நன்கொடையை அந்த தேவாலயத்தில் இருக்கும் ஃபாதர் பால் வரவேற்றுள்ளார். அத்துடன் யூசுஃப் அலி வழங்கிய 1 மில்லியன் திர்ஹம் நிதியுதவி ஒரு புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு கடவுளின் ஆசீர்வாதமாகும் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஜாதி, மதம், இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு உதவும் பணியில் யூசுஃபலி களமிறங்கியுள்ளதாகவும், இதுபோல, மற்றவர்களிடமிருந்தும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஃபாதர் பால் தெரிவித்துள்ளார். யூசுஃப் அலியின் இந்த செயலானது பலரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

அதேபோல் அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் எப்போதும் மதம், இனம் ஆகியவற்றை கடந்து அனைவரிடமும் சமத்துவத்தைப் போற்றும் நாடாகவும் அனைத்து நாட்டு மக்களையும் எவ்வித பாகுபாடுமின்றி வரவேற்கும் நாடாகவும் இருக்கின்றது. அமீரகத்தில் இந்த தேவாலயம் போன்றே அபுதாபியில் மிகப்பெரிய இந்து கோவில் கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!