உலகில் முதன்முறையாக அமீரகத்தில் கொரோனா நோயாளியை கண்டறிய பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள்..!!
உலகில் கொரோனா வைரஸைக் கண்டறிவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், அதில் தனித்துவமான முறையாக மோப்ப நாய்களை பயன்படுத்தி கொரோனா நோயாளியை வெற்றிகரமாகக் கண்டறியும் புதிய முயற்சியை உலகில் முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த மோப்ப நாய்களை பயன்படுத்தி ஒரு சில வினாடிகளில் கொரோனா நோயாளியைக் கண்டறிந்து விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிவதற்காக அமீரகத்தில் இருக்கக்கூடிய காவல்துறைக்கு சொந்தமான நாய்களுக்கு கொரோனா நோயாளியைக் கண்டறியும் பயிற்சி வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் அமீரகத்திற்கு வரும் பயணிகளில் கொரோனா அறிகுறி இருப்போரைக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையங்களில் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தனிநபரின் வியர்வை மூலம் வைரஸைக் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இதற்காக தனிநபர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியதில்லை என்றும் பயிற்சி அளிக்கப்பட நாயானது சில நொடிகளில், அந்த நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இம்முறையின் கீழ், காவல்துறையின் மோப்ப நாய்கள் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களிடையே எந்தவொரு நேரடி தொடர்பும் இன்றியும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மிக உயர்ந்த தரத்தின் படியும் கொரோனவிற்கான சோதனை மேற்கொள்வதில் ஐக்கிய அரபு அமீரகம் தனித்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.