அமீரக செய்திகள்

ஒரு நாள் உணவு டெலிவரி ரைடராக களமிறங்கிய Talabat நிறுவனத்தின் CEO!! – ரைடர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அனுபவித்து தீர்வுகளைத் தேடும் முயற்சி…

அமீரகத்தில் உள்ள பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ‘Talabat’இன் CEO Tomaso Rodriguez அவர்கள், அமீரகத்தில் கடந்த வாரம் ஒரு நாள் காலையில் டெலிவரி ரைடராக நேரத்தை செலவிட்டுள்ளார்.

சமீபத்தில், அமீரக மோட்டார் பைக் உரிமத்தைப் பெற்ற டோமசோ ரோட்ரிகுயேஸ், டெலிவரி ரைடர்களின் வேலையை அனுபவிக்க முடிவு செய்து, சக ரைடர்களின் உதவியுடன் டெலிவரி ரைடராக வலம் வந்துள்ளார். அப்போது ஆரம்பத்தில், பைக்கின் மொபைல் ஹோல்டரில் அவரது மொபைலை பொருத்திய இரண்டு நிமிடங்களிலேயே அதிக வெப்பமடைந்ததைக் கண்டு வியந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் வேலைக்கு புதியவன் என்பதால், என்னை வழிநடத்தவும் ஆதரிக்கவும் பலர் ஓடி வந்தனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நான் யார் என்பதை கண்டுபிடிக்கவில்லை. குறிப்பாக, சக ரைடர்கள் உதவவில்லையெனில், நான் தொலைந்து போயிருப்பேன்! இத்தகைய வலுவான சமூக உணர்வை ரைடர்களிடையே அனுபவிப்பது, முக்கிய சிறப்பம்சமாக இருந்தது” என்று நெகிழ்ந்துள்ளார்.

மேலும், அவரது டெலிவரி ரைடு அனுபவம் குறித்து விவரிக்கையில், மக்களின் வாழ்க்கையை எளிதாக்க, ரைடர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவ்வளவு எளிதானது அல்ல. இதில் மிகவும் சவாலான பகுதி வெப்பம், அத்துடன் வெளியில் ஆர்டர்களுக்காக காத்திருக்கும்போது, சில பகுதிகளில் கட்டிடங்களின் அடித்தளத்தில் மற்றும் தெருக்களில் பார்க்கிங் செய்ய கூட அனுமதிக்கவில்லை.

மொத்தத்தில், கட்டிடங்கள், விற்பனையாளர் இருப்பிடங்கள், காத்திருப்புப் பகுதிகள் மற்றும் பார்க்கிங் இடங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது சவாலாக இருந்தது என்று தனது அனுபவத்தைக் கூறியுள்ளார்.

அப்போது தான் மற்றொரு குறையைக் கண்டுபிடித்திருக்கிறார். அதாவது, ஆர்டரை டெலிவரி செய்த பின்னரே, ரைடர்கள் டிப்பிங் நோட்டிஃபிகேஷன்களை பெறுகின்றனர். இத்தகைய தாமதமான அறிவிப்புகளினால் டிப்ஸ் அளித்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக நன்றியைத் தெரிவிக்க ரைடர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த குறைபாடையும் தனது அரை நாள் அனுபவத்தின் போது கண்டுபிடித்த டோமாஸோ, இப்போது அதை மாற்ற வேலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தன்னைப்போலவே நிறுவனத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் டெலிவரி செய்வதில் ஒரு நாளை செலவிடுமாறு டோமாசோ ஊக்குவித்துள்ளார். அத்துடன், ஒவ்வொரு காலாண்டிலும் இந்த பயிற்சியை மீண்டும் செய்ய விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

சிக்கல்களுக்கானத் தீர்வு:

ஒரு நாளில் டோமாஸோ அனுபவித்த சிரமம் மற்றும் எதிர்கொண்ட சவால்களை கருத்தில் கொண்டு, அவரது குழுவினர் தற்போது அதற்கான தீர்வுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, மொபைல் அதிகம் சூடாவதைத் தடுக்க பைக்குகளுக்கு UV பாதுகாப்பு கண்ணாடிகளை பரிசீலித்து வருவதாகவும், பார்க்கிங் சவால்களுக்கு நகரங்களைச் சுற்றி ரைடர்ஸ் நிறுத்துவதற்கு சரியான இடத்தைக் கண்டறிய பிற அதிகாரிகளுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல, சாலைகளில் செல்லும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் வாகனத்தை இயக்க, நடைமுறை சாலைப் பாதுகாப்பு பயிற்சியையும் அதிகரித்துள்ளது.

மேலும் கொளுத்தும் கோடை வெயிலில் சுற்றித் திரிந்து உணவு டெலிவரி செய்யும் ரைடர்களின் தாகத்தை தணிக்கவும், அவர்களை அவ்வப்போது புத்துணர்ச்சியூட்டவும் குளிர்பானங்களை வழங்க விற்பனையாளர்களுடன் கூட்டாண்மைகளை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!