அமீரக செய்திகள்

துபாயில் நோல் கார்டு விதிமீறல்களுக்கு 200 திர்ஹம் அபராதம்… நோல் கார்டைப் பயன்படுத்தும்போது செய்யக்கூடாதவை என்ன..??

துபாயில் நீங்கள் அடிக்கடி துபாய் மெட்ரோ, பேருந்து, பொது பார்க்கிங், டாக்ஸி அல்லது பிற பொது போக்குவரத்து வசதிகளில் பயணிக்கும் நபரா? அப்படியானால், உங்கள் டிக்கெட் கட்டணத்தை நோல் கார்டில் செலுத்துபவராக நீங்கள் இருப்பீர்கள். ஆனால், இந்த நோல் கார்டை நீங்கள் மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் நோல் கார்டை தவறான வழிகளில் பயன்படுத்துவது அபராதத்திற்கு வழிவகுக்கும். ஆகவே, நோல் கார்டைப் பயன்படுத்தும்போது நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை:

1. உங்கள் நோல் கார்டில் உள்ள மைக்ரோசிப் சேதமடைவதைத் தடுக்க, ஒரு பாதுகாப்பான பவுச்சில் (pouch) கார்டை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

2. பயணம் முடிந்த பிறகு ஒவ்வொரு முறையும் துல்லியமான கட்டணத்தை செலுத்த, செக்-அவுட் செய்ய மறக்காமல் உங்கள் நோல் கார்டை இயந்திரத்தில் தட்டவும்.

3. உங்கள் நோல் கார்டில் எப்போதும் குறைந்தபட்ச பேலன்ஸ் 7 திர்ஹம்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரு வழிப் பயணமாக இருந்தால், குறைந்தபட்சம் 15 திர்ஹம் இருக்க வேண்டும்.

4. அதுபோல, ஒற்றைப் பயணத்திற்கு உங்கள் ரெட் டிக்கெட்டில் குறைந்தபட்ச பேலன்ஸ் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் இதை கார்டை வழங்கும் ஏஜென்ட்டுடன் சரிபார்க்கலாம்.

5. மேலும், உங்கள் நோல் கார்டு ரீடரில் (card reader) நிராகரிக்கப்பட்டால், இண்டிகேட்டர் லைட் ஒளிரும் வரை காத்திருந்து, பிறகு மீண்டும் முயற்சிக்கவும்.

6. ஒருவேளை, உங்கள் நீல நிற நோல் கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால், RTA வாடிக்கையாளர் சேவையை 800 90 90 என்ற எண்ணில் அழைத்து உடனடியாகப் புகாரளிக்கவும்.

செய்யக்கூடாதவை:

1. ஒரே நேரத்தில் ஒரு ரீடர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட நோல் கார்டுகளை வைக்க வேண்டாம்.

2. ரீடரில் இருந்து உங்கள் நோல் கார்டை மிக விரைவாக அகற்றாதீர்கள், இது முழுமையற்ற பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும். கார்டு ரீடர் பரிவர்த்தனையை முடிக்கவில்லை என்றால், பரிவர்த்தனை முடியும் வரை அதே நோல் கார்டை ரீடரில் வைத்திருக்கவும்.

3. அத்துடன் நோல் கார்டில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள், புகைப்படங்களை ஓட்டவோ, எழுதவோ, வளைக்கவோ வேண்டாம்.

4. நோல் கார்டைப் பின் பாக்கெட்டில் வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் நீங்கள் உட்காரும் போது கார்டில் உள்ள மைக்ரோசிப் சேதமடையக்கூடும்.

5. குறிப்பாக, உங்கள் நீல நிற நோல் கார்டை மற்றொரு நபர் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

நோல் கார்டு விதிமீறல்கள்:

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, பின்வரும் நோல் கார்டு மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

  • கோரிக்கையின் பேரில் நோல் கார்டை வழங்கத் தவறுதல் – 200 திர்ஹம்
  • மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கார்டைப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம்
  • காலாவதியான நோல் கார்டைப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம்
  • தவறான நோல் கார்டைப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம்

Related Articles

Back to top button
error: Content is protected !!