விசா விதிகளை மீறியவர்களுக்கான பொதுமன்னிப்பை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்த அமீரக அரசு…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பு விசா இல்லாமலும் விசா காலாவதியாகியும் நாட்டை விட்டு வெளியேறாமல் சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்தில் தற்பொழுது இருந்து வரும் வெளிநாட்டவர்களில், மார்ச் 1 க்கு முன்னர் காலாவதியான விசா மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தங்கி இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற அமீரக அரசு பொது மன்னிப்பு வழங்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.
கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பு மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நாளை ஆகஸ்ட் 18 ம் தேதியுடன் முடியவிருந்த நிலையில், தற்பொழுது குடியிருப்பு விசா விதிகளை மீறியவர்களுக்கான பொதுமன்னிப்பானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம் (ICA) அறிவித்துள்ளது.
ICA-வின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் துறைமுகங்களின் பொது இயக்குனர், மேஜர் ஜெனரல் சயீத் ரகன் அல் ரஷிடி அவர்கள் கூறுகையில், இந்த சலுகை கால நீட்டிப்பானது ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 17 வரை வழங்கப்படும் என்றும் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் விசா விதிகளை மீறிய அனைத்து விசாக்களை கொண்டிருப்பவர்க்கும் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சலுகை காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான விசிட், சுற்றுலா மற்றும் ரெசிடென்ஸ் விசா காலாவதியானவர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் நுழைவு மற்றும் ரெசிடென்ஸ் சட்டத்தை மீறிய அனைவருக்கும் இந்த பொது மன்னிப்பு பொருந்தும் என்பதை அல் ரஷிதி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்., மேலும் பொதுமன்னிப்பு பெற்று நாட்டை விட்டு வெளியேறிய நபர்கள் பின், மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர எந்த தடையும் இருக்காது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு பொது மன்னிப்பு பெற்று அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையங்களில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருக்கும் நபர்கள் விமான நிலையத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், துபாய் விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற விரும்புவோர் விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக டெர்மினலுக்கு அருகிலுள்ள சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு மையத்தில் உள்ள நாடுகடத்தல் மையத்திற்கு (deportation center) செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போதைய பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற விரும்பும் நபர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட்டை வைத்திருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற 800 453 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
An operation room along with a toll free number 800453 were dedicated to respond to all inquiries every day of the week from 8am until 10pm, except on holidays.#icauae #uae #covid19 pic.twitter.com/HpPKgHaGc4
— Identity and Citizenship- UAE (@ICAUAE) August 17, 2020