அமீரக செய்திகள்

மிகவும் பிஸியாகும் துபாய் ஏர்போர்ட்..!! பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட விமான நிலையம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலப் பள்ளி விடுமுறையும் ஆறு நாட்கள் ஈத் அல் அதா விடுமுறையும் ஒரே நேரத்தில் வருவதால், எதிர்வரும் வாரங்களில் உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று துபாய் ஏர்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று ஜூன் 20 ம் தேதி முதல் அடுத்து மாதம் ஜூலை 3 ம் தேதிக்கு வரையிலான  இடைப்பட்ட நாட்களில் துபாய் விமான நிலையம் சுமார் 3.5 மில்லியன் பயணிகளை கையாளும் என்றும், இந்த நாட்களில் சராசரி மொத்த தினசரி போக்குவரத்து எண்ணிக்கை 252,000 ஐ எட்டும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, ஜூன் 23 முதல் 25 ம் தேதி வரை கால் மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வெளிநாடுகளுக்கு புறப்படுவார்கள் என்றும் ஜூன் 24 சனிக்கிழமையன்று விமானநிலையம் எல்லா நாட்களையும் விட கூடுதல் பிஸியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதில் மொத்தப் புறப்பாடு சுமார் 100,000 பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் எஸ்ஸா அல் ஷம்சி அவர்கள் பேசுகையில், விமான நிலையத்தில் சர்வதேச அளவில் உயர்தர சேவையை பராமரிக்க DXB முழுவதும் உள்ள குழுக்கள், டெர்மினல் செயல்பாடுகள், விருந்தினர் அனுபவம், துபாய் போலீஸ் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமான நிறுவனங்கள், தரை கட்டுப்பாடு, லக்கேஜ் செயல்பாடுகள், கார் பார்க்கிங் என அனைத்து சேவைகளிலும் சரியான ஒத்திசைவுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈத் அல் அதா விடுமுறையின் கடைசி நாளான ஜூலை 2 அன்று விமான நிலையத்தின் மொத்த தினசரி போக்குவரத்து 305,000 பயணிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விமான நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிஸியான நேரங்களில் விமான நிலையத்தில் பயணிகள் பின்பற்ற வேண்டியவை:

>> எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகள் ஏர்லைன்ஸின் ஹோம், விரைவு மற்றும் சுய செக்-இன் வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கலாம். மேலும், துபாயில் DIFC பகுதியில் உள்ள ICD Brookfield Place மற்றும் அஜ்மானில் உள்ள பிரத்யேக வசதி ஆகியவற்றில் சிட்டி செக்-இன் வசதிகள் உள்ளன.

>> flydubai-ல் பயணிக்கும் நபர்கள் தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

>> மற்ற அனைத்து விமான நிறுவனங்களின் பயணிகள் விமானங்கள் புறப்படும் நேரத்திற்கு 3 மணிநேரத்திற்கு முன்னதாக DXB-க்கு வர வேண்டும். கூடுதலாக, நேரத்தை மிச்சப்படுத்த ஆன்லைனில் செக்-இன் செய்யலாம்.

>> 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் செயல்முறையை விரைவாக முடிக்கலாம்.

>> குறிப்பாக, பயண விதிமுறைகளை நன்கு அறிந்து, விமான நிலையத்தை அடைவதற்கு முன் தேவையான அனைத்து பயண ஆவணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

>> அதேசமயம், பயணத்திற்கு எடுத்துச்செல்லும் லக்கேஜ்களை வீட்டிலேயே எடைபோட்டு பார்ப்பது, முன்கூட்டியே ஆவணங்களை சேகரிப்பது மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு தயாராக இருப்பது விமான நிலையத்தில் பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

>> ஸ்பேர் பேட்டரிகள் மற்றும் பவர் பேங்க்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மேலும், பேட்டரிகள் மற்றும் பவர் பேங்க்களை சரியாக பேக் செய்து, ஹேண்ட் லக்கேஜ்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.

>> பயணிகள் துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தி டெர்மினல்கள் 1 மற்றும் 3 க்கு சென்று வரலாம். குறிப்பாக, ஈத் விடுமுறை நாட்களில் மெட்ரோ இயக்க நேரம் நீட்டிக்கப்படுகிறது.

>> விமான நிலையத்தின் டெர்மினல்கள் 1 மற்றும் 3 ஆகிய இரண்டிலும் உள்ள வருகையாளர்களின் முன்பகுதிகளில் பொது போக்குவரத்து மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய வாகனங்களுக்கு மட்டுமே அணுகல் உள்ளது. மேலும், விருந்தினர்களை அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு வருபவர்கள் தங்கள் விருந்தினர்களை பிக்அப் செய்ய DXB இன் நியமிக்கப்பட்ட கார் பார்க்கிங் அல்லது வாலட் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!