அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடுத்த ஆண்டு வரும் 9 நாள் தொடர் விடுமுறை.. முன்கூட்டியே பயணத்தை திட்டமிட பொன்னான வாயப்பு.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இந்தாண்டில் இன்னும் 2 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் வர உள்ளன. சில தனிப்பட்ட நிகழ்வுகள் அல்லது கோடை விடுமுறைக்கு திட்டமிடும் போது, பொது விடுமுறை நாட்களையும் நீண்ட வார இறுதி நாட்களையும் எதிர்பார்க்கும் குடியிருப்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இஸ்லாமியப் புத்தாண்டு விடுமுறை தற்போது முடிந்துள்ள நிலையில், அடுத்த நீண்ட விடுமுறையை முஹம்மது நபி பிறந்த நாளுக்கு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரையிலான நாட்களில் குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம். மேலும், இதற்கு அடுத்ததாக இந்தாண்டின் கடைசி விடுமுறையான டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அமீரக தேசிய தினத்திற்கான விடுமுறையையும் குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.

இந்த இரண்டையும் தவிர்த்து அடுத்த ஆண்டு மிக நீண்ட விடுமுறையாக 9 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. அமீரகத்தில் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் திருமணங்கள் அல்லது பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தங்கள் வருடாந்திர விடுமுறையை முன்கூட்டியே திட்டமிட இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இதுபோன்ற வருடாந்திர பயணங்களுக்காக, நீண்ட விடுமுறைக்குத் திட்டமிடும் குடியிருப்பாளர்கள் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வரும் ஈத் அல் பித்ர் பண்டிகைக்கான 9 நாட்கள் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் அடுத்த ஆண்டின் ஈத் அல் அதா பண்டிகைக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறையும் வரவுள்ளது.

வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், அமீரகத்தில் புனித ரமலான் மாதம் மார்ச் 11, 2024 இல் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் இது 30 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஈத் அல் பித்ர் ஆனது ஏப்ரல் 10, 2024 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட வாயப்பிருப்பதாக வானியல் நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அமீரகத்தை பொருத்தவரை ஈத் அல் பித்ர் விடுமுறைகள் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை வழங்கப்படும். அதாவது ஏப்ரல் 8, திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை வரை ஊழியர்கள் விடுமுறையை அனுபவிக்கலாம். இந்த விடுமுறையுடன் முந்தைய மற்றும் பிந்தைய சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களையும் சேர்த்து ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 14 வரை என மொத்தம் ஒன்பது நாள் தொடர் விடுமுறையை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.

அதுபோல, 2024 ஆம் ஆண்டு ஈத் அல் அதா ஜூன் 17 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கும் என்றும் வானியல் நிபுனர்கள் கணித்துள்ளனர். அவ்வாறு ஈத் அல் அதா அறிவிக்கப்பட்ட தேதியில் வந்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஜூன் 15 முதல் ஜூன் 19 வரை என ஐந்து நாள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

எனவே, அடுத்த ஆண்டு குறுகிய விடுமுறை அல்லது நீண்ட விடுமுறையாக சொந்த நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிடுபவர்கள், இந்த தேதிகளை கருத்தில் கொண்டு தங்களின் பயணத்தை அமைத்துக் கொண்டால் தங்கள் குடும்பத்தினருடன் கூடுதல் நாட்களை செலவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!