அமீரக செய்திகள்

UAE: உலகின் மிகப்பெரிய உட்புற பனி பூங்கா, 1,000 கடைகளை உள்ளடக்கிய இரு மால்கள்.. விரைவில் அபுதாபியில் திறப்பு..!!

அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஏற்கெனவே பல மால்கள் இருக்கும் நிலையில் புதுவித அம்சங்களுடன் மேலும் இரண்டு புதிய மற்றும் மிகப்பெரிய மால்கள் அபுதாபியில் திறப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த இரண்டு மால்கள் திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரீம் மால் (Reem Mall):

அபுதாபியின் ரீம் ஐலேண்டில் நடைபெற்றுவரும் சுமார் $1.2 பில்லியன் (Dh4.4 பில்லியன்) மதிப்பிலான இந்த மாலின் மெகா திட்டம் அபுதாபியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த மிகப்பெரிய ரீம் மாலின் திறப்புவிழா குறித்து தேதி எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், வெகுவிரைவில் பொது மக்களுக்கு அதன் கதவுகளைத் திறந்து வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிதாகத் திறக்கப்படவுள்ள இந்த மாலில் 400 க்கும் மேற்பட்ட கடைகள், சுமார் 85 உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. அத்துடன் சுமார் இரண்டு மில்லியன் சதுர அடி கொண்ட இந்த இடத்தில் வோக்ஸ் சினிமாஸ் (Vox Cinemas) உட்பட குடும்பத்தை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு சலுகைகளையும் இந்த மால் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், நவீன முறையில் கையாளப்படும் ஸ்டோர்-டு-டோர் சேவையின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் 24 மணி நேர டெலிவரி வசதியையும் GCC முழுவதும் 72 மணிநேர டெலிவரி வசதியையும் செயல்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இங்கு கேரிஃபோர் ஹைப்பர் மார்க்கெட் (Carrefour hypermarket), ஷரஃப் டிஜி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேட்ஜெட்கள் கடை (Sharaf DG electronics and gadgets) மற்றும் 6,800 இடங்கள் கொண்ட மிகப்பெரிய கார் பார்க்கிங் வசதி போன்றவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் ஈர்க்கும் பனி பூங்கா:

ரீம் மால் பிராந்தியத்தின் மிகப்பெரிய பனி பூங்காக்களில் ஒன்றான ஸ்னோ அபுதாபியின் தாயகமாக விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், 500 மிமீ ஆழத்திற்கு பனியையும் இந்த மாலில் உள்ள ஸ்னோ பார்க் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, 12 உற்சாகமான சவாரிகள் மற்றும் 17 புதிய மற்றும் அற்புதமான இடங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய உட்புற பனி பூங்காக்களில் (indoor snow park) இதுவும் ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது.

தி கேப்பிட்டல் மால் – சைனா சென்டர்:

இந்த புதிய சைனா சென்டர் இன்று (மார்ச்.13) பொதுமக்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஷாப்பிங் சென்டரானது அபுதாபியின் முஹம்மது பின் சயீத் சிட்டியில் (MBZ சிட்டி) இயங்கிவரும் கேபிடல் மாலில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஷாப்பிங் மட்டுமின்றி, இங்கு பல்வேறு வகையான சாப்பாட்டுக் கடை மற்றும் பொழுதுபோக்கு இடங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் இருந்து பொருட்கள் கிடைப்பதுடன் சீன உற்பத்தியாளர்களிடமிருந்து தரமான பிராண்டுகளை வழங்கும் 600 கடைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனா சென்டர், கேப்பிடல் ஆரிஜின் இன்டர்நேஷனல் கேப்பிடல் மால், MBZ சிட்டியின் தலைவர் அட்னான் டஹ்னஸ் அவர்கள் பேசுகையில், சீன அரசாங்கம், மனாசெல் குழுமம் (Manazel Group) மற்றும் அதன் முழுக் குழுவின் முழு ஆதரவுடன் அபுதாபியில் இந்த வர்த்தக மையத்தை தொடங்குவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரவித்துள்ளார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில், சீன தயாரிப்புகள், பிராண்டுகள் மற்றும் நிறுவனங்கள் அமீரகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், இந்த திட்டங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அபுதாபியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கட்டுமானப் பொருட்கள் முதல் இயந்திரங்கள் வரை, ஜவுளிகள் முதல் ஃபர்னிச்சர்கள் வரை அனைத்தையும் சிறந்த தரத்துடன் வழங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்துடன் நின்று விடாமல், மத்திய கிழக்கு சந்தைக்கு தரமான சீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு அதிக வர்த்தக வாய்ப்புகள் மற்றும் தளங்களை உருவாக்குவோம் என்றும், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் அதற்கு அப்பால் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!