அமீரக செய்திகள்

துபாய்: சொந்த ஊருக்கு செல்ல விடுமுறை கேட்டதற்கு மறுத்த முதலாளியை கொலை செய்த ஊழியர்..!! ஆயுள் தண்டடை விதித்த நீதிமன்றம்..!!

துபாயில் தனது விடுமுறை கோரிக்கையை நிராகரித்த முதலாளியைக் கொன்ற குற்றத்திற்காக துபாயில் ஒரு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய் கோர்ட் ஆஃப் ஃபர்ஸ்ட் இன்ஸ்டன்ஸ் (dubai court of first instance) படி, அல் கூஸ் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் பணிபுரிந்த 23 வயதான ஊழியர் தனது விடுமுறையை மறுத்த விரக்தியில், அவரது மேலாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அவரை கூர்மையான கத்தியால் கழுத்தை அறுத்து, பின்னர் சுத்தியலால் தலையை அடித்து நொறுக்கி கொலை செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

துபாய் காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலரின் கூற்றுப்படி, கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த மேலாளரை அவரது ஊழியர்கள் கண்டுள்ளனர் மற்றும் அந்த கொலையாளியைதான் மேலாளருடன் கடைசியாகப் பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் “கேரேஜில் இருந்த தொழிலாளர்கள், சம்பவம் நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கேரேஜை விட்டு வெளியேறி பின் மீண்டும் திரும்புகையில், மேலாளர் இறந்து கிடப்பதைப் பார்தத்தாக கூறியுள்ளனர். மேலும் கொலையாளியாக கூறப்படும் நபருடன் தான் கடைசியாக மேலாளரை பார்த்ததாலும் அந்த சம்பவத்திற்கு பின் அந்த நபர் காணாமல் போய்விட்டதாலும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துளனர்” என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொலையாளி நாட்டை விட்டு வெளியேற துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் பயணிக்க விரும்பிய இடத்திற்கு விமானங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் செய்த கொலையை பற்றி தெரிவிக்காமல், நாட்டை விட்டு வெளியேற உதவி கேட்டு இரண்டாவது நாள் துணைத் தூதரகத்திற்கும் சென்றிருக்கிறார்.

இதனை தொடர்ந்து உத்தியோகபூர்வ பதிவுகளின்படி, துபாய் காவல்துறை அவரை தூதரகத்திற்கு வெளியே கைது செய்திருக்கின்றது.

காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், “கொலையாளி தனது நாட்டிற்கு செல்ல மேலாளரிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் திரும்பும் தேதிக்கு மேலாளர் உடன்படவில்லை. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாத்ததில் பொறுமை இழந்த மேலாளர் அவரை பணி நீக்கம் செய்து அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் அவமானப்படுத்தப்பட்டதாக எண்ணிய கொலையாளி நிதானத்தை இழந்து இந்த கொலையை செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​கொலையாளி என கூறப்பட்ட நபர் தனது சக ஊழியர்கள் பணியிடத்தை விட்டு வெளியேறும் வரை காத்திருந்ததாகவும், அவர்கள் வெளியேறியதும் கதவைப் பூட்டிவிட்டு மேலாளரை தாக்க கத்தியை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் தனது மேலாளரின்  தொண்டையை கத்தியால் வெட்டியுள்ளார். ஆனால் அவருக்கு தொடர்ந்து சுவாசம் இருந்ததால், ஒரு சுத்தியலை எடுத்து அவரது தலையை அடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு துபாய் காவல்துறையால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!