இந்தியா-அமீரக பயணத்தடை எதிரொலி: 360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் வெறும் இரண்டு குடும்பங்கள் மட்டுமே பயணம்..!!
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து பயணிகள் அமீரகத்திற்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
இந்த சமயத்தில், 360 பயணிகள் பயணிக்கக்கூடிய எமிரேட்ஸ் விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த வெறும் இரண்டு குடும்பங்கள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொச்சியில் இருந்து துபாய் வந்தடைந்துள்ளனர்.
இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு துபாய் வந்து சேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தாலும், கோல்டன் விசா கொண்ட இந்தியர்கள் இந்த இடைநீக்கத்திலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
கணினி விற்பனை நிறுவனமான அல் இர்ஷாத் கம்ப்யூட்டர்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூனஸ் ஹசன் அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது குடும்பம் அமீரகத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யூனுஸின் மனைவி ஹப்சா மற்றும் அவரது குழந்தைகள் நிஹ்லா யூனுஸ், நுஜூம் யூனுஸ், முகமது ஹிலால் மற்றும் முகமது ஹனி ஹம்தான் ஆகியோர் அவரது ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் கோல்டன் விசாவைப் பெற்று விமானத்தில் பயணித்துள்ளனர்.
அவர்கள் துபாய்க்கு வர விமான டிக்கெட்டுகளுக்கு ரூ .180,000 (9,000 திர்ஹம்) செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் எகானமி க்ளாஸில் விமான முன்பதிவு செய்திருந்த போதிலும் பிஸினஸ் க்ளாஸ் உட்பட விமானத்தின் எந்த இருக்கையிலும் அமர அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விமான பணியாளர் இருந்தார்கள். அவர்கள் எங்களுடன் டெர்மினல் வரை வந்து, கோவிட் சோதனை எடுக்கவும், இமிக்ரேஷன் செயல்முறையை முடிக்கவும் பெரிதும் உதவினார்கள்” என்று நிஹ்லா தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமானத்தில் பயணித்த ஹப்சா தங்களுக்கு கோல்டன் விசா வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.