UAE: இனி வாட்ஸ்அப் மூலமாகவே கொரோனா தடுப்பூசிக்கான அப்பாய்மெண்ட் பெறலாம்..!! DHA தகவல்..!!
துபாய் குடியிருப்பாளர்கள் இனி கோவிட் -19 தடுப்பூசிக்கான அப்பாய்மெண்டை வாட்ஸ்அப் வழியாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துபாய் சுகாதார ஆணையம் கூறுகையில், அப்பாய்மென்ட் செய்வதற்கு வசதியாக வாட்ஸ்அப் ஹாட்லைன் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.
24/7 என முழு நேரமும் செயல்படும் வாட்ஸ்அப் ஹாட்லைனை அணுக, பயனர்கள் தங்கள் மொபைலில் இருந்து 800 342 என்ற எண்ணிற்கு, வாட்ஸ்அப்பில் “Hi” என அனுப்ப வேண்டும்.
தடுப்பூசிக்கான அப்பாய்மெண்டை பதிவு செய்ய, பயனர்கள் தங்கள் மருத்துவ பதிவு எண்ணை (Medical Record Number) சமர்ப்பிக்க வேண்டும், இது சேவையை அணுகுவதற்கான முன்நிபந்தனையாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையில், குடியிருப்பாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தடுப்பூசி மையம் மற்றும் தடுப்பூசி போடப்படும் தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யலாம். AI- இயக்கப்பட்ட அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மையத்தில் பயனர்களுக்கு அப்பாய்மெண்டிற்கான விருப்பங்களை வழங்கும். இந்த செயல்முறை முடிந்தவுடன் பயனர்கள் தங்கள் மையம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றின் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
தானியங்கு சாட்போட் பயன்பாடு (automated chatbot application) முழுநேரமும் இயங்கி வரும் ஒரு இலவச சேவையாகும், இது ஆரம்பத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கோவிட் -19 மற்றும் பிற DHA சேவைகள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்டது.
DHA ஹாட்லைன் சேவையை வழங்கத் தொடங்கியதிலிருந்து 150,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொடர்பான சந்தேகங்கள் வாட்ஸ்அப் மூலம் உரையாற்றப்பட்டுள்ளன.
இந்த புதிய சேவையானது குடியிருப்பாளர்கள் தடுப்பூசி போடுவதை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.