அமீரக செய்திகள்

துபாய் எக்ஸ்போவில் 100 இளம் ஜோடிகளுடன் நடந்த மாஸ் திருமணம்.. மணமக்களை வாழ்த்திய துணை பிரதமர்..!!

துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அமீரக உள்துறை அமைச்சகத்தின் ஃபாஸா (Fazaa) சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஆதரவின் கீழ் அமீரகத்தை சேர்ந்த 100 இளம் ஜோடிகளுக்கு பிரம்மாண்டமான திருமணம் ஒன்று அமீரகத்தின் பாரம்பரிய முறையில் நடந்துள்ளது.

எக்ஸ்போ தலத்தில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரக பெவிலியனுக்கு அருகில் உள்ள கயாத் டிரெயிலில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய திருமண நிகழ்ச்சியில், அமீரகத்தின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு ஜெனரல் ஷேக் சைஃப் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்ட “ஃபாஸா” முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த திருமணமே எக்ஸ்போ 2020 துபாயில் முதன்முதலில் நடைபெற்ற மிகப்பெரிய திருமணம் ஆகும். மேலும் திருமணம் செய்துகொள்ளும் இளம் ஜோடிகளுக்கு அவர்களின் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்குவதற்கு மதிப்புமிக்க பரிசுகளுடன் இந்த மாஸ் திருமணத்தை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ் திருமணம் பற்றி ஃபாஸா சமூக பாதுகாப்பு நிதியத்தின் பொது மேலாளர் கர்னல் அகமது முகமது புஹாரூன் கூறுகையில், “இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள், ஷேக் சைஃப் பின் சையத்தின் வருகை இந்த மிகப்பெரிய திருமணத்தை கௌரவித்துள்ளது, இது எங்களின் பாரம்பரியமான “Fazaa” முன்முயற்சிக்கு புத்துயிர் அளிக்க உதவியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், உள்துறை அமைச்சத்தின் ஊழியர்களான இந்த இளம் ஜோடிகளுக்கு திருமணச் செலவில் ஃபாஸா உதவிக்கரம் நீட்டியதாகவும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பார்வையாளர்கள் முன்னிலையில் எங்களது உண்மையான எமிராட்டி மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்காக இந்த ஆண்டு மாஸ் திருமணத்தை நடத்த எக்ஸ்போ 2020 துபாயை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!