வளைகுடா செய்திகள்

சவூதியை நோக்கி தாக்குதல் நடத்திய ஹவுதி… பொதுமக்கள் வீடு, வாகனம் சேதம்.. கண்டனங்கள் தெரிவிக்கும் உலக நாடுகள்…!!

ஹவுதி போராளிகள் சவூதியை நோக்கி தாக்குதல் நடத்துவதும் அதனை சவூதி இடைமறித்து அழிப்பதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு சவூதி அரேபியாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மற்றும் எரிசக்தி மையங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி போராளிகளின் செயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல உலக நாடுகள் கடுமையாக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலின் காரணமாக ஜித்தாவில் உள்ள அரம்கோ பெட்ரோலிய விநியோக நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதே போன்று சம்தாவை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில், அங்குள்ள மின்சார விநியோக நிலையத்தில் தீப்பிடித்துள்ளது.

தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக அந்த இடம் முழுவதும் கருப்பு புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது. தீவிபத்து ஏற்பட்டிருந்தாலும், இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதை சவூதி உறுதிப்படுத்தியுள்ளது.

ஹவுதி போராளிகள் குடியிருப்பு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, குடியிருப்பு வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து பல நாடுகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளன. அத்துடன் இந்த தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!