அமீரக செய்திகள்

அமீரகத்தில் பள்ளி குழந்தைகள் மூலம் குடும்பத்தினருக்கு கோல்டன் விசா பெறுவது எப்படி..? முழு விபரம் உள்ளே..!

அமீரகத்தில் கடந்த 2019-வது ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்களின்படி வெளிநாட்டு மக்களை கவரும் விதத்தில் நீண்ட நாட்களுக்கான கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது 5 மற்றும் 10 ஆண்டுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு விசாவானது 2 ஆண்டுக்கு மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோல்டன் விசா முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், அறிவியல் துறையில் நிபுணர்கள் மற்றும் குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் என குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இதுவரை அமீரகத்தில் விசா பெற்று படித்து வரும் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது அமீரக விசாவில் வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள் ஆகியோர் சராசரியாக தரவரிசையில் 3.75 புள்ளிகள் பெற்று இருந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தற்போது கோல்டன் விசாவில் மேலும் கூடுதல் சலுகையாக பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் வசித்து வரும் சிறந்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும், திறமையானவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் அமீரக அரசானது கோல்டன் விசாவை பள்ளி மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.

இதில் அமீரகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். அமீரகத்தில் படிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த திறமையான வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் 10 ஆண்டுக்கான கோல்டன் விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் 95 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இந்த கோல்டன் விசாவை பெறலாம். மாணவர்களுக்கான இந்த விசாவிற்கு அமீரக அரசு பள்ளிக்கூடங்கள் அமைப்பின் (எமிரேட்ஸ் ஸ்கூல்ஸ் எஸ்டாபிலிஷ்மென்ட்) மூலமாக விண்ணப்பிக்க வசதி செய்துதரப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!