அமீரக செய்திகள்

UAE: ஈத் விடுமுறையில் அமீரகத்தை விட்டு வெளியே பயணிப்பவர்கள் கட்டாயம் இதை மறக்க வேண்டாம்.. பயண முகவர்கள் அறிவுரை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஈத் பண்டிகையைக் கொண்டாட அவர்களது சொந்த ஊர்களுக்கு அல்லது சுற்றுலாப் பயணம் செல்வது வழக்கம். இந்நிலையில், அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் விசா முத்திரை இல்லை என்பதால், விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தடைகளைத் தவிர்க்க, நாட்டிற்கு வெளியே பறக்கும் வெளிநாட்டவர்கள் எமிரேட்ஸ் ஐடியை மறக்காமல் எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிராவல் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், விசா முத்திரையிடப்படாத பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்பவர்கள் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஐடியை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் கஜகஸ்தான், ஆர்மீனியா, ஜார்ஜியா, அஜர்பைஜான், செர்பியா, அல்பேனியா மற்றும் கிர்கிஸ்தான் போன்ற இடங்களுக்கு குறுகியகால சுற்றுளா செல்ல திட்டமிட்டுள்ளவர்களும் எமிரேட்ஸ் ஐடியை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல சமயங்களில் இந்திய விமான நிலையத்தில் விசா அங்கீகாரத்திற்காக தங்களை அதிகாரிகள் நிறுத்தியதாகவும், இந்திய விமான நிலையங்களில் உள்ள ஊழியர்களுக்கு அமீரக குடியிருப்பாளர் என்பதை நிரூபிக்க அசல் எமிரேட்ஸ் ஐடி தேவைப்பட்டதாகவும் சமீபத்தில் பயணம் செய்த ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான பெடரல் அத்தாரிட்டி (ICP) எமிரேட்ஸ் ஐடிகள் இப்போது ரெசிடென்சி ஆதாரமாக செயல்படும் என்று தெரிவித்தது. பாஸ்போர்ட்டுகளில் விசா முத்திரையில் அச்சிடப்படும் அனைத்து விசா தொடர்புடைய விவரங்களும் புதிய எமிரேட்ஸ் ஐடியில் உள்ளன, மேலும் பல்வேறு விமான நிலையங்களில் உள்ள குடிவரவு கவுண்டர்கள் எமிரேட்ஸ் ஐடியில் உள்ள தரவுகளையும் படிக்க முடியும்.

இருப்பினும் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பயணிக்கும் போது, அந்தந்த நாடுகளின் விமான நிலையத்தில் இருக்கும் இமிகிரேசன் கவுண்டர்களில் பணிபுரியும் புதிய அதிகாரிகள் மற்றும் செக்-இன் கவுண்டர்களில் உள்ள புதிய ஊழியர்கள், சில சமயங்களில் இந்த விதியைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதால், விமான நிலையத்தில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் தங்களின் எமிரேட்ஸ் ஐடியை எடுத்துச் செல்வதன் மூலம் எளிதான மற்றும் சுமூகமான பயணத்தை மேற்கொள்ளலாம் என டிராவல் நிறுவன உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!