அமீரக செய்திகள்

விமானத்திற்குள் முகக்கவசம் தேவை இல்லை.. வழிபாட்டு தலங்களில் இடைவெளி கட்டாயமில்லை.. தளர்வுகளை அறிவித்த அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமலில் இருந்து வரும் பெரும்பாலான கோவிட் பாதுகாப்பு விதிகளை அமீரக அதிகாரிகள் தளர்த்தியுள்ளனர். நாட்டில் தற்போது தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலும், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக கொரோனா வைரஸால் இறப்புகள் ஏதும் பதியவில்லை என்பதாலும், கொரோனா விதிகள் தளரத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த புதிய விதிகள் வரும் செப்டம்பர் 28 ம் தேதி, புதன்கிழமை முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமீரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஒரு விர்ச்சுவல் மீட்டிங்கில், அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முகக்கவசம் அணிவது விருப்பமாக மாற்றப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளார். மேலும் விமானங்களுக்குள் பயணிக்கும் போது, முகக்கவசம் அணிவது இனி தேவையில்லை என்றும், ஆனால் தேவைப்படும் பட்சத்தில் விமான நிறுவனங்கள் முகக்கவச விதியை அமல்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அமீரகத்தின் பள்ளிகளிலும் முகக்கவசம் கட்டாயமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமீரக அரசின் இந்த அறிவிப்பை, துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) உறுதிப்படுத்தியுள்ளது. KHDA வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 28 முதல் தனியார் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இனி முகக்கவசம் கட்டாயமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அதேபோன்று, வழிபாட்டுத்தலங்களில் ஒருவருக்கொருவர் இடைவெளி விட வேண்டும் என்ற கட்டாயத் தேவையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், மசூதிகள் மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அனைத்து உணவு டெலிவரி செய்பவர்கள், கோவிட் நோயாளிகள் மற்றும் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கொரோனால் வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நாளிலிருந்து இன்றுடன் 1,000வது நாள் என்பதனை உலகம் குறிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!