அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட கொரோனா நெறிமுறைகளை அறிவித்த அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கமானது இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் ஈத்-அல்-ஃபித்ர் பண்டிகைக்காக புதுப்பிக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 27 அன்று நடந்த வாராந்திர மாநாட்டின் போது ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு திருத்தப்பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் வழிபாட்டாளர்கள் அதிகாலை ஈத்-அல்-ஃபித்ர் தொழுகைகளில் கலந்துகொள்ளும் போது முக கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தல், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் Al Hosn மொபைல் அப்ளிகேஷனில் செல்லுபடியாகும் கிரீன் பாஸை வைத்திருத்தல் போன்றவை அடங்கும்.

ஐக்கிய அரபு அமீரகமும் அதன் தலைமையும் மேற்கொண்ட பரவலான சோதனை, பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்காணித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக விலகலை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தியிருந்தாலும், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

அன்புக்குரியவர்களுடன் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புடன் ஈத் பண்டிகையை கொண்டாட அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட நெறிமுறைகள்:

> அல் ஹோஸ்னில் செல்லுபடியாகும் கிரீன் பாஸ் வைத்திருப்பதை உறுதி செய்தல் மற்றும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக விலகலைப் பயிற்சி செய்தல் போன்ற தடுப்பு நடைமுறைகளை குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் அருகில் இருக்கும் போது முறையாக கடைபிடிப்பது.

> மசூதிகளின் வெளிப்புறப் பகுதிகளில், மசூதிகளுக்கு அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களில் சமூக இடைவெளி ஸ்டிக்கர்களைக் பயன்படுத்துதல்.

> ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஈத் தக்பீர்களை ஒலிபரப்பலாம். ஈத் முஸல்லாக்கள் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் திறக்கப்பட வேண்டும்.

> தொழுகை மற்றும் குத்பாவின் கால அளவு 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், மேலும் வழிபாட்டாளர்களின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள் காவல்துறையின் ரோந்துப்படை, தன்னார்வலர்கள் மற்றும் இமாம்களால் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம்

> வழிபாட்டாளர்கள் எல்லா நேரங்களிலும் முக கவசங்களை அணிய வேண்டும் மற்றும் ஒரு மீட்டர் தூரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அத்துடன் தனிப்பட்ட தொழுகை விரிப்புகளை (முஸல்லா) பயன்படுத்த வேண்டும்.

> பொதுமக்கள் ஒன்றுகூடுவது மற்றும் கைகுலுக்குவதைத் தவிர்க்கவும்

> ஈத் பரிசுகளை வழங்க மின்னணு முறை போன்ற மாற்று முறைகளை பயன்படுத்தவும்

> குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் ஈத் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும். அதிகளவில் கூட்டமாக ஒன்று சேர்வதை தவிர்க்கவும்

Related Articles

Back to top button
error: Content is protected !!