அமீரக செய்திகள்

துபாய்: ஏப்ரல் 17 முதல் ஐந்து வாரங்களுக்கு மூடப்படும் ‘Floating Bridge’.. மாற்று பாதைகளை வெளியிட்ட RTA.!!

துபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்புப் பணிகளுக்கு வழிவகுக்கும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 17, 2023 முதல் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு ஃப்ளோட்டிங் பிரிட்ஜின் (Floating Bridge) இருதிசைகளும் மூடப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, மாற்று சாலைகள் மற்றும் குறுக்கு வழிகளில் போக்குவரத்தை இயக்குவதற்கான திட்டத்தையும் RTA வகுத்துள்ளது. அதன்படி, அல் மக்தூம் பிரிட்ஜ், இன்ஃபினிட்டி பிரிட்ஜ் மற்றும் அல் கர்ஹூத் பிரிட்ஜ் வழியாக வாகனங்களை இயக்குவது மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலை, எமிரேட்ஸ் சாலை போன்ற முக்கிய சாலைகளை பயன்படுத்துவது போன்ற மாற்று வழிகளை RTA வெளியிட்டுள்ளது.

கூடுதலாக அல் இத்திஹாத் ஸ்ட்ரீட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக அல் மம்சார் ஸ்ட்ரீட்டின் வெளியேறும் வழி (EXIT) திறக்கப்படும் எனவும் RTA கூறியுள்ளது. ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் சாலைக்கு மாற்றாக RTA வகுத்துள்ள மாற்று வழிகளுக்கான திட்டங்கள் பற்றிய தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஷார்ஜாவிலிருந்து அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் வழியாக பயணிக்க: கெய்ரோ ஸ்ட்ரீட் மற்றும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியாக இன்ஃபினிட்டி பாலத்தை எளிதாக அணுகுவதற்கு அல் மம்சார் எக்ஸிட் வழியை பயன்படுத்தலாம். தற்போது பஸ் மற்றும் டாக்ஸி மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த எக்ஸிட்டில், ஏப்ரல் 17 முதல் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படும்.

2. தேராவிலிருந்து அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியாக பர் துபாய்க்கு பயணிக்க: இன்ஃபினிட்டி பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.

3. ஷார்ஜாவிலிருந்து அல் இத்திஹாத் சாலை வழியாக பர் துபாய்க்கு பயணிக்க: அல் கர்ஹூத் பிரிட்ஜ் அல்லது அல் மக்தூம் பிரிட்ஜ் வழியாக இன்ஃபினிட்டி பாலத்தை எளிதாக அணுகலாம். மேலும் இன்ஃபினிட்டி பாலத்தை அடைய கெய்ரோ ஸ்ட்ரீட் மற்றும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியையும் பயன்படுத்தலாம்.

4. பர் துபாயிலிருந்து காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட் வழியாக தேராவிற்கு பயணிக்க: அல் மக்தூம் பிரிட்ஜ் மற்றும் இன்ஃபினிட்டி பாலத்தைப் பயன்படுத்தலாம்.

5. பர் துபாயிலிருந்து உம் ஹுரைர் சாலை வழியாக தேராவுக்கு பயணிக்க: வாகன ஓட்டிகள் அல் மக்தூம் பிரிட்ஜை பயன்படுத்தலாம்.

6. பர் துபாயிலிருந்து ஷேக் சையத் சாலை வழியாக தேராவுக்கு பயணிக்க: அல் கர்ஹூத் பிரிட்ஜ், அல் மக்தூம் பிரிட்ஜ், இன்பினிட்டி பிரிட்ஜ் மற்றும் பிசினஸ் பே கிராசிங் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

7. பர் துபாயில் இருந்து ஓத் மேத்தா சாலை வழியாக தேரா வரை பயணிக்க: அல் மக்தூம் பிரிட்ஜ் மற்றும் அல் கர்ஹூத் பிரிட்ஜ் சாலையை பயன்படுத்தலாம்.

8. பர் துபாயிலிருந்து அல் ரியாத் ஸ்ட்ரீட் வழியாக தேராவுக்கு பயணிக்க: அல் மக்தூம் பிரிட்ஜ் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.

9. பர் துபாய் மற்றும் தேரா இடையே பயணிக்க: ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை போன்ற முக்கிய சாலைகளையும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.

ப்ளோட்டிங் பிரிட்ஜ் மூடப்படும் போது சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக போக்குவரத்து இயக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. அத்துடன் மாற்று வழிகளுக்கான வரைபடத்தை RTA தனது சமூக ஊடக பக்கத்தில் வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும் பகிர்ந்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!