அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் அமலுக்கு வரும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை.. எப்போது முதல் தெரியுமா..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு சில எமிரேட்டுகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி 1, 2024 முதல் அமீரகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அடுத்த ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் பயன்பாட்டிற்கு அமைச்சர்களின் தீர்மானம் தடை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது வரை அபுதாபி, துபாய், ஷார்ஜா, உம் அல் குவைன் ஆகிய நான்கு எமிரேட்டுகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிடைத்துள்ள தகவலின்படி, அடுத்த ஆண்டு அமலுக்கு வரவிருக்கும் பிளாஸ்டிக் தடைகளில் ஒரு சில பொருள்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அது போலவே, நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட பைகளுக்கும் உணவுப் பொருட்களை புதியதாக வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் மெல்லிய பை ரோல்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்றுமதி அல்லது மறுஏற்றுமதி செய்ய வேண்டிய தயாரிப்புகள் தெளிவாக லேபிளிடப்பட்டிருந்தால், விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வெளியான செய்தியின்படி, அமீரகத்தின் நடவடிக்கைகள் பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பங்குதாரர்கள், நுகர்வோர் மற்றும் இது தொடர்பான அதிகாரிகள் உட்பட அனைவரும் பிளாஸ்டிக்கை சார்ந்திருப்பதைக் குறைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும்  பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், சாப்ஸ்டிக்ஸ், ஸ்ட்ராக்கள் மற்றும் கிளறிகள் போன்றவை ஜனவரி 1, 2026 முதல் தடை செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இயர் பட்ஸ், சிகரெட், பலூன்கள் உள்ளிட்ட பொருட்களை பேக்கேஜ் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களின் உற்பத்தியைக் குறைப்பதற்கான வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அபுதாபியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நடைமுறைக்கு வந்தது. அதனையடுத்து, துபாயில் ஜூலை 1-ஆம் தேதி முதல், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பைக்கு 25 ஃபில்ஸ் வாங்குகின்றனர். ஷார்ஜாவில் கடந்த அக்டோபர் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு 25 ஃபில் கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. ஜனவரி 1, 2023 முதல் உம் அல் குவைன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!