அமீரக செய்திகள்

இந்தியா-அமீரகப் பயணத்தடை: 73 சுகாதார ஊழியர்கள் சிறப்பு விமானத்தில் அமீரகம் திரும்பினர்..!!

விமானத் தடை காரணமாக இந்தியாவில் சிக்கித் தவித்த 73 இந்திய சுகாதாரப் பணியாளர்கள் புதன்கிழமை துபாய் சுகாதார ஆணையத்திடம் (DHA) சிறப்பு ஒப்புதல் பெற்ற பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்துள்ளதாக அமீரகத்தில் இயங்கிவரும் அஸ்தெர் TM குழு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட விமானத் தடை காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் ஆஸ்தெர் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளைச் சேர்ந்த மொத்தம் 250 மருத்துவ ஊழியர்களில், முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அடங்கிய 73 பேர் அமீரகத்திற்கு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் பாதுகாப்பாக பயணிப்பதற்காக, 73 பேர் கொண்ட குழு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு புதன்கிழமை அதிகாலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இரண்டு சிறப்பு எமிரேட்ஸ் விமானங்களில் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது அமீரகத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் அமீரக குடியிருப்பாளர்கள். இவர்கள் விமானத் தடை அறிவிக்கப்பட்டபோது வருடாந்திர அல்லது அவசரகால விடுப்பில் இந்தியாவில் இருந்ததால் அமீரகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவித்துள்ளனர். மேலும் புதிய பணியாளர்களும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர். இந்த மருத்துவ வல்லுநர்கள், தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று ஆஸ்தெர் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் பயணித்த ஒரு மருத்துவரான டாக்டர் மஜீத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கு அனைத்து மருத்துவ ஊழியர்களும் எடுக்க வேண்டிய தேவையான முன்னெச்சரிக்கைகள் குறித்து கூறுகையில் “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பதற்காக மொத்தம் மூன்று PCR சோதனைகளை மேற்கொண்டோம். முதல் சோதனை நாங்கள் பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டது, மற்றொரு சோதனை விமானத்தில் ஏறுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் செய்யப்பட்டது. பின்னர் துபாயில் தரையிறங்கியவுடன் ஒரு சோதனை எடுக்கப்பட்டது. எங்கள் PCR முடிவுகள் வரும் வரை நாங்கள் ஒரு ஹோட்டலில் ஒரு நாள் தங்கியிருந்தோம், அதன் பிறகு அடுத்த ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். அதைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் மற்றொரு சோதனை செய்து முடிப்போம். அந்த முடிவு வந்த பின்னர் நாங்கள் மீண்டும் பணியில் இணைந்து கொள்வோம்” என் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்களை மீண்டும் கொண்டுவருவதற்கான சிறப்பு பயண அனுமதிக்காக சுகாதாரக் குழு முதலில் DHA-வை அணுகியுள்ளது. DHA விமான சேவைக்கு அனுமதி வழங்கி அங்கீகரிக்கப்பட்ட பயணிகளின் பட்டியலை எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு அனுப்பியது என்று சுகாதாரக் குழு கூறியுள்ளது.

மேலும் இந்தியாவில் இன்னும் 250 ஊழியர்கள் சிக்கியுள்ளதாகவும், சுமார் 120 புதிய ஊழியர்கள் ஆஸ்தெர் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரிய ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க காத்திருப்பதாகவும் சுகாதாரக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆஸ்தெர் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷெர்பாஸ் பிச்சு, தற்பொழுது அமீரகம் வந்திறங்கிய குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் தேவையான அனைத்து ஒப்புதல்களும் உள்ளன என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “எங்கள் சுகாதார வல்லுநர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு (பாண்டிச்சேரி), மகாராஷ்டிரா (மும்பை), ஹைதராபாத் மற்றும் மத்திய பிரதேசம் (இந்தூர்) ஆகிய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜூலை 7 ஆம் தேதி கொச்சின் மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்கு தங்கள் விமானங்களுக்காக பயணம் செய்துள்ளனர்”.

“இந்த ஏற்பாட்டை சாத்தியமாக்குவதில் துபாய் அரசு, DHA, துபாய் விமான நிலைய ஆணையம் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆகியவை வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தொற்றுநோய்களின் போது எங்கள் ஊழியர்கள் திரும்பி வந்து துபாயில் உள்ள மருத்துவமனைகளின் ஊழியர்கள் இடைவெளிகளை நிரப்புவது மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!