அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் 39 மாடி கட்டிட தீவிபத்தில் 5 பேர் பலியான சோகம்.. 40 க்கும் மேற்பட்டோர் காயம்..!!

ஷார்ஜாவில் கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷார்ஜாவில் இருக்கக்கூடிய அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த வியாழன் இரவு 9.30 மணியளவில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 17 பேருக்கு மிதமான காயங்களும் 27 பேர் சிறிய காயங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஷார்ஜா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 17 பேருக்கும் அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த கட்டிடமானது 750 குடியிருப்புகள் உட்பட 39 தளங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிபத்தைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 156 குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் 18 குழந்தைகள் உள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் 18 வது மற்றும் 26வது தளத்தில் உள்ள எலக்ட்ரிகல் டிரான்ஸ்ஃபரில் ஏற்பட்ட தீயே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவத்தின் போது தீயில் இருந்து தப்பிப்பதற்காக இந்த கட்டிடத்தில் வசித்து வந்த  ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

வியாழன் இரவு தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இரவு 10.50 மணியளவில் ஆணையத்திற்கு அழைப்பு வந்ததாகவும் அவசரகால பதில் குழுக்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஆணையம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!