அமீரக செய்திகள்

உங்களின் அடையாளத்திற்கு இனி எமிரேட்ஸ் ஐடி தேவையில்லை.. உங்கள் முகமே போதும்.. விரைவில் வரும் புதிய டெக்னாலாஜி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட அடையாளத்திற்கு தற்பொழுது வரை பயன்படுத்தும் எமிரேட்ஸ் ஐடியானது, இனி வரும் காலத்தில் அது உங்களின் அடையாள சான்றாக இருந்ததாக வரலாற்றில் மட்டுமே இருக்கலாம். ஆம், கூடிய விரைவில் எமிரேட்ஸ் ஐடிக்கு பதிலாக உங்கள் முகமே உங்களின் அடையாளமாக இருக்கும். மேலும் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உங்கள் முகமே இனி வழங்கும். இது பற்றிய கூடுதல் தகவல்களை கீழே காண்போம்.

அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) முக அங்கீகார அம்சத்தைப் பயன்படுத்தி தனிநபர்களின் தனிப்பட்ட அடையாளத்தை சரிபார்க்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் சான்றிதழ் போர்ட்டலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இனி நாம் நமது எமிரேட்ஸ் ஐடியை கையில் கொண்டு செல்வதற்கு பதிலாக, நமது முகத்தின் மூலமாகவே நம்மை பற்றிய அனைத்து விபரங்களையும் வழங்க முடியும்.

இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் உங்கள் முகத்தின் சரிபார்ப்பைச் செய்து அதை தரவுத்தளத்தில் சேமிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அல்காரிதம், நமது முகத்தின் பயோமெட்ரிக்ஸைக் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தின் விவரங்களைப் பெறும். இதில் பெரிய விஷயம் என்னவென்றால் இந்த புதிய தொழில்நுட்பம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கிடைக்கலாம் என்று ICA டிஜிட்டல் சேவைகள் பிரிவின் தலைவர் மஜீத் அல்ப்லூஷி கூறியுள்ளார்.

யாருக்கெல்லாம் இந்த சேவை கிடைக்கும்..??

அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) அறிமுகப்படுத்தியுள்ள முக அங்கீகாரத்தின் புதுப்பிக்கப்பட்ட இந்த வழிமுறை, மூன்று வினாடிகளுக்குள் தனிநபர்களை எளிதில் அடையாளம் காண அனுமதிக்கும் என்றும் எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கும்.

பதிவு செய்வது எப்படி..??

எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் மேற்கூறிய நபர்கள் வாடிக்கையாளர் சேவை நிலையம், ஸ்மார்ட் அப்ளிகேஷன் அல்லது சுய சேவை இயந்திரங்களில் இருந்து இந்த புதிய சேவைக்கு பதிவு செய்யலாம். முக பயோமெட்ரிக் ICA போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டவுடன், பதிவு செய்பவர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த ஒன் டைம் பாஸ்வேர்டை (OTP) பெறுவார். அதனை பயன்படுத்தி அவரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டவுடன், அமீரகத்திற்குள் இனி அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த எமிரேட்ஸ் ஐடி தேவையில்லை. அதனை இந்த புதிய அமைப்பே செய்யும்.

இது பற்றி ICA டிஜிட்டல் சேவைகள் பிரிவின் தலைவர் மஜீத் அல்ப்லூஷி விவரிக்கையில், இந்த புதிய அமைப்பில் பதிவு செய்யும் நபரின் எமிரேட்ஸ் ஐடி எண், பாஸ்போர்ட் எண், ஒருங்கிணைந்த அடையாள எண் (UID Number) மற்றும் ஒரு குறிப்பிட்ட QR குறியீடு உள்ளிட்ட பயனரின் தரவுகள் சேமிக்கப்படும், மேலும் அவர் எமிரேட்ஸ் ஐடி, பாஸ்போர்ட் போன்றவற்றின் டிஜிட்டல் நகலை இதிலிருந்தும் பெற முடியும். தனிநபரின் அடையாளத்திற்கான QR குறியீடை உருவாக்கவும் ஒன் டைம் பாஸ்வேர்ட் பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு துறைகளின் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்களில், முக அங்கீகார தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படும்..??

>> இந்த மையங்களில் உள்ள பணியாளர் முக அங்கீகார கேமராவைப் பயன்படுத்துவார்.

>> கணினியில் உங்கள் எமிரேட்ஸ் ஐடியுடன் பொருந்த உங்கள் முக அச்சு பயன்படுத்தப்படும். அது  பொருந்தியவுடன், நீங்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெறுவீர்கள், அதை நீங்கள் பணியாளருக்கு வழங்க வேண்டும்.

>> அவர் பின்னர் OTP ஐ உள்ளிடுவார்கள். OTP உள்ளிட்ட பிறகு, டிஜிட்டல் சரிபார்ப்பு சேவை உங்கள் ரெசிடென்ஸ் விவரங்கள் மற்றும் உங்கள் குடும்பம் மற்றும் விசா சார்ந்திருப்பவர்கள் ஆகியவற்றைக் காண்பிக்கும். மேலும் இது உங்கள் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் குடும்ப உறுப்பினர்களையும் அடையாளம் மற்றும் குடியுரிமை தொடர்பான பிற தகவல்களையும் காண்பிக்கும்.

“ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ஃபேமிலி புக் என்ற வகையின் கீழ் பதிவு செய்துகொள்ள ஆப்சன் வழங்கப்படும், மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அவரை சார்ந்து உள்ளவர்களின் விவரங்களுடன் ஒரு ரெசிடென்சி நகல் சேமிக்கப்படும்” என்றும் அல்ப்லூஷி குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய முக அங்கீகார தொழில்நுட்பம் வங்கி, சுகாதாரம் மற்றும் பல்வேறு வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடனான செயல்பாடுகளை எளிதாக்கும் என்றும் அல்ப்லூஷி குறிப்பிட்டுள்ளார்.

நேர்மறையான மாற்றத்திற்காக டிஜிட்டல் மயமாக்கலில் ஐக்கிய அரபு அமீரகம் கவனம் செலுத்துகிறது. அதனை நோக்கிய பயணத்தில் நாங்கள் பின்பற்றும் திட்டங்களில் இதுவும் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!