அமீரக செய்திகள்

UAE: இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கும் ரமலான்.. நோன்பு வைக்கக்கூடிய நேரங்களை கணித்த வானியல் நிபுணர்.. விடுமுறை எப்போது…??

ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதம் துவங்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்றது. சரியாக கூற வேண்டுமானால் இன்னும் 40 நாட்களே இருக்கின்றன. இந்த ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் பகலில் உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்த்து நோன்பிருப்பதால் அமீரகத்தில் பள்ளி மற்றும் அலுவலகங்கள் இயங்கும் நேரங்கள் குறைக்கப்படுகின்றன. அமீரகத்தில் இருக்கும் அலுவலகங்கள் அனைத்தும் மதிய வேளையோடு முடிவடையும்.

வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் (AUASS) உறுப்பினரான எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வானின் கூற்றுப்படி, அமீரகத்தில் மார்ச் 23, 2023 வியாழக்கிழமை, புனித ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் பிறை பார்ப்பதன் மூலமே உண்மையான தேதி தீர்மானிக்கப்படும். மேலும் இஸ்லாமிய மாதங்கள் பிறையைப் பார்ப்பதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும்.

அதனடிப்படையில் அமீரகத்தில் இந்த ஆண்டு, ரமலான் மாதம் ஏப்ரல் 20 வரை என 29 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 21 அன்று இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாக இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும் அல் ஜர்வான், இந்த மாதத்தில் காலை முதல் மாலை வரை நோன்பு இருக்கும் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் நோன்பு வைக்கக்கூடிய நேரங்கள் 13 மணி நேரம் 30 நிமிடங்களாக இருக்கும் என்றும், மாதம் முடியும் நேரத்தில், இது 14 மணி 13 நிமிடங்களாக அதிகரித்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஏறக்குறைய 40 நிமிடங்கள் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு ரமலான் மாதம் வசந்த காலத்தில் வருவதாகவும் அடுத்த ஆண்டு ரமலான் மாதம் வானியல் ரீதியாக குளிர்காலத்தின் முடிவில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமீரக அரசு வெளியிட்டுள்ள 2023 ம் ஆண்டின் விடுமுறை பட்டியலின்படி ஈத் அல் ஃபித்ருக்கு 4 நாட்கள் வரை விடுமுறை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமிய நாட்காட்டியின்படி ஈத் அல் ஃபித்ர் விடுமுறையானது ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின்படி, இது ஏப்ரல் 20 வியாழன் முதல் ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கும். இருப்பினும் இந்த தேதியானது பிறை பார்ப்பதன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!