அமீரகத்தில் மாறிவரும் வானிலை.. துபாயின் அல் குத்ரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை.. !!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலம் முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், துபாய் உட்பட அமீரகத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை அவ்வப்போது பெய்து வருகிறது. சமீபகாலமாக நாட்டில் ஏராளமான ஆலங்கட்டி மழை பெய்து வந்தாலும், பெரும்பாலும் அமீரகத்தின் வெளிப்புற பகுதிகளில்தான் அதிகளவில் மழை பெய்துள்ளது.
தற்போது துபாயின் அல் குத்ரா ஏரியில் இன்று திங்கள்கிழமை கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), மனிதனால் உருவாக்கப்பட்ட அல் குத்ரா ஏரிகளை கொண்ட, அல் மர்மூம் பாலைவனப் பாதுகாப்புக் காப்பகத்தின் ஒரு பகுதியில் கனமழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே போன்று துபாயின் எமிரேட்ஸ் சாலை, அபுதாபியின் சில பகுதிகள், அல் ஐன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளதாகவும் NCM குறிப்பிட்டுள்ளது. மேலும் இது போன்ற கனமழை மற்றும் அதிவேகக் காற்றினால் மோசமான தெரிவுநிலை ஏற்படும் எனவும் NCM குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.
அமீரகத்தின் தற்போதைய வானியல் கணக்கீடுகளின்படி, இம்மாதத்தில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க சரிவு இருக்கும் என்றும், வானிலை நிலைகளில் விரைவான மாற்றங்கள் காணப்படும் என்றும் NCM கூறியுள்ளது,