வளைகுடா செய்திகள்

ஓமானை நெருங்கும் தேஜ் புயல்.. 15,000 பேர் வெளியேற்றம்.. சூறாவளி காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு..!!

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் தீவிரமடைந்து வருவதுடன் ஓமானை நோக்கி நகர்வதால், கடலோரப்பகுதிகளான தோஃபர் கவர்னரேட் மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டில் உள்ள அல் ஜாசிரின் விலாயத் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சீரற்ற வானிலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

அதேசமயம், ஓமானின் ஹலானியாத் ஐலேண்ட் மற்றும் சலாலா, ரக்யுத் மற்றும் தால்கோட் மாநிலங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் தோஃபர் கவர்னட்டில் தயார் செய்யப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் தங்குமிடங்களில் 15,000 பேர் குடியேற உள்ளனர்.

தற்போது, சலாலாவிலிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள தேஜ் புயல், மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இது இன்று மாலை அல்லது நாளை காலை ஏமன் மற்றும் ஓமான் கடற்கரைகளை கடந்து செல்ல வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

மேலும், ஓமான் வானிலை ஆய்வு (Oman Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, அரேபியன் கடலில் உருவாகியுள்ள புயல் இப்போது வகை 2 இன் வெப்பமண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது வகை 1 க்கு குறையும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே, கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற சீரற்ற வானிலை நிலவி வருகிறது. இத்தகைய மோசமான வானிலையை கருத்தில் கொண்டு, அக்டோபர் 23 மற்றும் 24ஆம் தேதி தோஃபர் கவர்னரேட் மற்றும் அல் வுஸ்டா கவர்னரேட்டில் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வானிலை அறிக்கைகளின் படி, புயலினால் நாட்டிற்குள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மேலும், பலத்த காற்றின் விளைவாக பொருட்கள் காற்றில் பறக்கும் மற்றும் மரங்கள் வேரோடு பிடுங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

இவ்வாறான சூழலில், மக்களுக்கு இயக்கத்தை எளிதாக்க மஸ்கட் மற்றும் சலாலா விமான நிலையங்களுக்கு இடையே விமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையற்ற வானிலையின் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், குறிப்பாக பள்ளத்தாக்குகளைக் கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!