அமீரகத்தில் தொடரும் நிலையற்ற வானிலை.. குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் நிலையற்ற வானிலையும் நிலவி வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் அமீரகத்தில் நிலையற்ற வானிலை தொடர்ந்து நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் (MoI) செவ்வாயன்று குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில் அடுத்த சில நாட்களில் நிலையற்ற வானிலை அமீரகத்தில் எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் MoI மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), மற்றும் பிற நிறுவனங்கள், இந்த காலகட்டத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலைக்கும் முழுமையாக தயாராக இருப்பதாக பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அத்துடன் வானிலை பற்றிய தவறான செய்திகள் மற்றும் வதந்திகளைப் பகிர்வதற்கு எதிராக குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் முன்னறிவிக்கப்பட்ட சில பகுதிகளில் சில சமயங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் கனமான மழையுடன் மேகமூட்டமான சூழல் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் NCM வாகன ஓட்டிகளுக்கான பல பாதுகாப்பு குறிப்புகளை பட்டியலிட்டுள்ளது. அவை:
>> முற்றிலும் தேவைப்படாவிட்டால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால், எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டவும், மேலும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவும்.
>> தெரிவுநிலை (visibility) குறையும் போது லோ-பீம் ஹெட்லைட்களை ஆன் செய்யவும்.
>> அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றவும் மற்றும் இது தொடர்புடைய அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும்.
>> வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் மற்றும் அதிகாரப்பூர்வ NCM அறிக்கைகளைப் பின்பற்றவும்.