அமீரக செய்திகள்

துபாய்: 93 கிமீ தூரம்.. மூடிய சாலை.. ஆண்டு முழுவதும் சீரான காலநிலை.. புத்தம் புதிய ‘தி லூப் நெடுஞ்சாலை’ பற்றி தெரியுமா.!!

துபாயின் முக்கிய பகுதிகளை இணைத்து சுமார் 93 கிமீ தொலைவிற்கு, சைக்கிள் மற்றும் நடைப்பயிற்சிக்கு ஏற்ற வகையில், ஆண்டு முழுவதும் சீரான காலநிலையை பராமரிக்கும் விதமாக, “தி லூப்” எனும் வளைய வடிவிலான அமைப்பினால் (The loop structure) மூடப்பட்ட ஒரு நெடுஞ்சாலையை உருவாக்க, புதிய திட்டம் ஒன்று துபாயில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மூடப்பட்ட சாலை திட்டத்தின் மாதிரி வடிவத்தை வெளியிட்ட URB நிறுவனம், இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் துபாயில் வசிக்கும் மக்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களை நகரத்தின் முக்கிய இடங்களுடன் இந்த சாலை இணைக்கும் என்று கூறியுள்ளது.

துபாயின் மிக நெரிசலான மாவட்டங்களை இணைக்கும் மூடிய வளைய அமைப்பிலான இந்த திட்டம் குறித்து URB இன் CEO பஹராஷ் பகேரியன் கூறுகையில், லூப் அமைப்பின் மாதிரி கட்டிட வடிவமைப்பை தற்போது எட்டியுள்ளோம், மேலும் வணிகச் சாத்தியக்கூறுகளுக்கு ஏற்றவாறு இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தி லூப் நெடுஞ்சாலை இணைக்கும் முக்கிய பகுதிகளின் வரைபடம்

மேலும் கூறுகையில், நகரத்தில் பொதுவாக நீண்ட தொலைவிற்கு சைக்கிள் அல்லது நடை பயணமாக செல்லும்போது, வெப்பம், குளிர், மழை, பனி போன்ற சீரற்ற காலநிலையால் குடியிருப்பாளர்களுக்கு பல இடையூறுகள் ஏற்படும் வாய்ப்புகள் சற்று அதிகம். ஆனால், இந்த லூப் அமைப்பில் கொடுக்கப்படும் தொழில்நுட்பம் மூலமாக, காலநிலை கட்டுப்பாட்டு சூழலை ஆண்டு முழுவதும் வழங்க முடியும் என்பதால், துபாயை நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஒட்டுதலுக்கான முதன்மையான நகரமாக மாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தி லூப் நெடுஞ்சாலையின் மூடிய சாலையின் உட்புற தோற்றம்

அத்துடன், நகரத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய நடைபாதைகள், பூங்காக்கள் போன்றவற்றுடன் இந்த லூப் அமைப்பை இணைக்க, இதில் பல நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும் என கூறியதோடு, மேலும் இது 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் என்றும், இதில் குளிர்வூட்ட பயன்படுத்தப்படும் அனைத்து நீரும் பாசனத்திற்காக மறுசுழற்சி செய்யப்படும் என்றும் இதன் மாதிரி வடிவத்தை வெளியிட்டுள்ள URB நிறுவனம் தெரிவித்துள்ளது.

தி லூப் நெடுஞ்சாலையின் சைக்கிள் மற்றும் நடைபயிற்சி சாலையின் மாதிரி படம்

மேலும், இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மக்கள் நடந்து செல்லும்போது அவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், இந்த அமைப்பில் செங்குத்து பண்ணைகளும் (Vertical Farms) அமைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தி லூப் நெடுஞ்சாலையின் செங்குத்து பண்ணைகளின் (Vertical Farms) மாதிரி படம்

துபாயின் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பூங்காக்கள், விளையாட்டுப் பகுதிகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்வேறு வகையான பொது இடங்களைக் கொண்டிருக்கும் இந்த திட்டம் தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள URB நிறுவனம், இந்த திட்டத்திற்கான செலவு குறிப்பிட்ட சில காலத்திற்கு ரகசியமானதாக இருக்கும் என்றும், இதுவரை இதுபோன்ற மூடப்பட்ட சாலை வேறு எங்கும் முயற்சிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!