UAE : போதைப்பொருள் கடத்த முயற்சித்தவர்களை மடக்கிப் பிடித்த துபாய் போலீஸ்… 32 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் போதைப்பொருள் கடத்த முயற்சித்தவர்களை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது. வெளியாகியுள்ள செய்திகளின்படி, சுமார் 111 கிலோ போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருந்த மூன்று போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை துபாய் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கிட்டத்தட்ட 32 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் 99 கிலோ எடை கொண்ட சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான கேப்டகன் மாத்திரைகள் மற்றும் 12 கிலோ எடையுள்ள ஹெராயின், கஞ்சா ஆகியவை அடங்கும் என்றும் அவற்றில் கேப்டகன் மாத்திரைகள் மட்டும் 31 மில்லியன் திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ளவை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், காவல்துறையின் வெவ்வேறு நடவடிக்கைகளில் மூன்று கும்பல்களும் பிடிபட்டுள்ளன. காவல்துறையின் முதலாவது ஆபரேஷனில் நன்கு திட்டமிடப்பட்டு பதுங்கியிருந்து கண்காணித்ததால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு, இரண்டாவது நடவடிக்கையில், சுமார் 9.7 கிலோ கிரிஸ்டல் மெத் மற்றும் மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்த நபர் சர்வதேச மொபைல் எண்ணைப் பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நடவடிக்கையில், சமூக ஊடகங்களில் போதைப்பொருளை ஊக்குவித்து வந்த ஒருவரை காவல்துறை குறிவைத்துள்ளது. பின்னர், சந்தேகத்திற்குறிய அந்த நபர் ஹெரோயின் காப்ஸ்யூல்களுடன் பிடிபட்ட நிலையில், மேலும் கிரிஸ்டல் மெத் மற்றும் ஹாஷிஸ் போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த 23 பேரையும் காவல்துறை கைது செய்ய வழிவகுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து துபாய் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம், அந்நியர்களிடமிருந்து வாட்சப் மெசேஜ் அல்லது குறுஞ்செய்திகளைப் பெறும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக துபாய் காவல்துறையின் அவசரமற்ற எண் (901)க்கு அழைத்து போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைப் புகாரளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.