அமீரக செய்திகள்

UAE: குழந்தைகளை காருக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் தொடங்கி தற்போது வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியுள்ள நிலையில், குழந்தைகளைத் தனியாக கார்களுக்குள் விட்டுச் செல்வது, அவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (heatstroke) மற்றும் சில நேரங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும் அபாயமான சூழல் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, கொளுத்தும் கோடைகாலங்களில் ஜன்னல்கள் மூடப்பட்டு, ஏர் கண்டிஷனிங் இல்லாமல் நிறுத்தப்பட்ட கார்களுக்குள் இருக்கும் போது, தீவிர ஆபத்தை அனுபவிக்க நேரிடும். ஏனெனில், கிரீன்ஹவுஸ் விளைவினால், சூரிய ஒளி காருக்குள் நுழையும் போது வாகனத்திலிருந்து தப்பிக்க முடியாது. எனவே, இது சில நிமிடங்களில் காருக்குள் வெப்பநிலையை உயர்த்துகிறது.

இது தொடர்பான பரிசோதனையில் ஈடுபடுவதற்கு களமிறங்கிய இரண்டு ஹெல்த்கேர் பயிற்சியாளர்கள், முதலில் நிறுத்தி வைக்கப்பட்ட SUV இல் ஏறியதும், ஏர் கண்டிஷனிங்கை அணைத்துவிட்டு, வெப்பநிலை உயர்வை பதிவு செய்ய ஒரு தெர்மாமீட்டரரைப் பொருத்தியுள்ளனர்.

அடுத்து வெறும் 15 நிமிடங்களில், காருக்குள் வெப்பநிலை 46 டிகிரியை எட்டியது. அப்போது அவர்களுக்கு கடுமையாக வியர்த்துக் கொட்டியதுடன் கடுமையான வெப்பம் விரைவான இதயத் துடிப்பைத் தூண்டத் தொடங்கியது, இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு இருக்கையில், குழந்தைகள் இத்தகைய சூழல்களுக்குள் தள்ளப்பட்டால், அதன் விளைவு எவருக்கும் நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், பெரியவர்களைப் போல குழந்தைகளால் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாது. அதேவேளை, மூடப்பட்ட கார்களுக்குள் சிக்கிக் கொள்ளும் குழந்தைகள் தங்களின் அபாய நிலையை தெரிவிக்க முடியாமல் போகலாம். அவர்கள் முற்றிலும் பெரியவர்களை நம்பியிருப்பதால், காருக்குள் தனியாக விட்டுச் செல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா பகுதி போன்ற நாடுகளிலும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோலவே, அமீரகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

சிக்கிக் கொள்ளும் குழந்தையின் மனநிலை:

பார்க்கிங் செய்யப்பட்ட காருக்குள் AC இல்லாமல் 20 நிமிடங்களுக்கு இருக்கும் போது, ஒரு குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யாராலும் விவரிக்க முடியாது, ஆனால் அவர்கள் கோமாவிற்குள் நுழைவதற்கு முன்பு அல்லது மரணத்திற்கு ஆளாகுவதற்கு முன்பு கடுமையாக அவதிப்படுவார்கள் என்பது உறுதியான ஒன்றாகும் என்று மெட்கேர் எலும்பியல் மற்றும் முதுகெலும்பு மருத்துவமனையின் துணை மருத்துவரான தீரஜ் சர்லிங் என்பவர் கூறியுள்ளார்.

எப்படி காப்பாற்றுவது?

காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்டெடுத்ததும் முதலில் அவர்களை குளிர்விக்க வேண்டும். அதற்கு அவர்களுடைய சட்டையை அவிழ்த்து விசிறி விடவும், மேலும் இடுப்பு, கழுத்து பகுதி மற்றும் அக்குள்களில் ஐஸ் கட்டிகளை கொடுத்து அவர்களை குளிர்விப்பது சிறந்தது என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், ஒரு அளவிற்கு மேல் குளிர்விப்பதும் மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, போதுமான குளிர்ச்சி முக்கியமானது மற்றும் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்கவும்.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:

  1. இத்தகைய துயர சம்பவங்களுக்கு குழந்தைகளைப் பறிகொடுத்து விடாமல் இருக்க, குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லக் கூடாது.
  2. பின் இருக்கையில் குழந்தைகள் இருப்பதை கவனிப்பதற்கு காரில் இருந்து வெளியேறும் போதெல்லாம் பூட்டுவதற்கு முன் சரிபார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  3. அதேசமயம், குழந்தைகள் தாங்களாகவே காருக்குள் நுழைவதைத் தடுக்க வாகனம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும்.
  4. காரில் குழந்தை தனியாக இருப்பதைக் கண்டால், உடனடியாக காவல்துறை அல்லது அவசர சேவைகளை தொடர்பு கொள்ளவும்.
  5. இக்கட்டான சூழலில் சிரமப்படும் போது, மருத்துவ உதவிக்கு அழைப்பதில் தாமதம் வேண்டாம். குழந்தை சுயநினைவுடன் இருந்தால், குளிர்ந்த நீரை தடவி, ஏர் கண்டிஷனிங்கை இயக்கவும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!