அமீரக செய்திகள்

அபுதாபி – துபாய் இடையே முழுமையடைந்த எதிஹாட் ரயில் பாதை.. விடியோவை பகிர்ந்த ஷேக் மக்தூம்..!!

ஐக்கிய அரபு அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டத்தின் கீழ் அபுதாபி மற்றும் துபாய் இடையே போடப்பட்டு வந்த எதிஹாட் ரயில் பாதை அமைக்கும் பணியானது தற்போது முழுமையடைந்துள்ளது. இதனால் அபுதாபி மற்றும் துபாய் இப்போது நேரடி ரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் எதிஹாட் ரயில் சேவை தொடங்கப்படும் பட்சத்தில், பயணிகள் வெறும் 50 நிமிடங்களுக்குள் இரண்டு எமிரேட்களுக்கு இடையே பயணம் செய்யலாம்.

தேசிய ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக அமீரகத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் துபாய் இடையேயான இந்த ரயில் பாதையை உருவாக்க 47 மில்லியன் வேலை நேரம் மற்றும் 27 மாதங்கள் ஆனதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமான பணியில் 13,300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றதாகவும், 256 கிமீ நீளமுள்ள இந்த ரயில் பாதையில் 29 பாலங்கள், 60 ரோடு கிராஸிங் மற்றும் 137 வடிகால் கால்வாய்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

துபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அபுதாபி இளவரசர் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் எதிஹாட் ரெயில் தலைவர் ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நேரில் பார்த்ததாக அந்த வரலாற்றுத் தருணத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த இருவரும் சேர்ந்து ரயில் பாதையின் இறுதிப் பகுதியை நிறுவியதன் மூலம் இந்த ரயில் பாதை அமைக்கும் பணியானது நிறைவடைந்துள்ளது.

ஷேக் மக்தூம் பின் முகமது ட்வீட் செய்ததாவது“அபுதாபி மற்றும் துபாய் இடையேயான இந்த இணைப்பை நிறைவு செய்திருப்பது எதிஹாத் ரயில்வேக்கு ஒரு பெரிய சாதனையாகும். இதனால் பொருளாதார மற்றும் மேம்பாட்டு நன்மைகள் பல ஆண்டுகளாக நீடிக்கும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் போட்டித்தன்மை உயரும். மிக முக்கியமாக, இந்த மாபெரும் தேசியத் திட்டத்தின் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சங்கத்தின் உணர்வு வேரூன்றியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

50 பில்லியன் திர்ஹம் முதலீட்டில் அமீரக அரசின் 50 திட்டங்களின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட ரயில்வே திட்டமானது, அமீரகத்தின் ஏழு எமிரேட்டுகளை இணைக்கும் தேசிய ரயில்வே திட்ட வலையமைப்பு திட்டமாகும். மேலும் இந்த திட்டம் அமீரகத்தில் 200 பில்லியன் திர்ஹம் அளவுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 2021 இல் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய இரயில்வே திட்டம், எதிஹாட் ரெயிலின் பயணிகள் சேவைகள் மூலமாக அமீரகத்தின் நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை இணைப்பதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய தரைவழி போக்குவரத்து அமைப்பை உருவாக்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தும் அடங்கும்.

சவூதி நாட்டின் பார்டர் பகுதியான அல் சிலா முதல் புஜைரா வரையிலான 11 நகரங்களை இணைக்கும், 400 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்ட இந்த எதிஹாட் ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்பதும், 2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பயனாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 36.5 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!