காலி வீட்டில் ‘வீடு வாடகைக்கு’ போஸ்டர் ஒட்டி வீடு தேடியவரிடம் 135,000 திர்ஹம்ஸ் பணத்தை அபேஸ் செய்த நண்பர்கள்..

துபாயில் வசிக்கும் ஆசிய வெளிநாட்டவர் ஒருவர் தனக்குச் சொந்தமில்லாத ஒரு காலி வீட்டை குத்தகைக்கு விடப்படும் என விளம்பரம் போட்டு, வாடகைக்கு வீடு தேடிய குடியிருப்பாளர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து காசோலைகளையும், 135,000 திர்ஹம்ஸ் பணத்தையும் முன்பணமாகப் பெற்று மோசடி செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அரேபிய குடியிருப்பாளர் வாடகைக்கு வீடுதேடி சென்ற போது துபாயின் அல் துவார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆண்டுக்கு 235,000 திர்ஹம்ஸ் வாடகையில் வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று ஒட்டப்பட்டிருந்த விளம்பரத்தைக் கண்டு அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது வீட்டின் உரிமையாளர் என்று கூறிக்கொண்ட குற்றவாளி மற்றொரு நபரையும் பாதிக்கப்பட்ட அரேபிய நாட்டவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்க்கலாமா என்று கேட்ட போது ஒரு தேதியைக் குறிப்பிட்டு இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் கூறிய தேதியில் அந்த இடத்திற்குச் சென்று அவர்களைச் சந்தித்ததுடன் 135,000 திர்ஹம்களை முன்பணமாக கொடுத்துள்ளார். அத்துடன் மீதத்தொகைக்கான 100,000 திர்ஹம் மதிப்புள்ள இரண்டு காசோலைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
வீட்டை ஒப்படைக்கும் நேரம் வந்தும் வீட்டை ஒப்படைக்காமல் அந்த இருவரும் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் அவர் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இறுதியாக அந்த வீட்டின் உரிமையாளர்கள் அவர்கள் கிடையாது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதையே அவர் உணர்ந்துள்ளார்.
பணத்தைப் பறிகொடுத்ததை உணர்ந்த குடியிருப்பாளர் உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து மோசடி செய்த அந்த இருவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த இரு குற்றவாளிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இரு குற்றவாளிகளுக்கு சிறைத் தன்டனையுடன், சிறைக்காலம் முடிந்த பிறகு நாடுகடத்தவும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்பளித்துள்ளனர். மேலும் இதுபோன்ற ரியல் எஸ்டேட் மோசடிகள் குறித்து குடியிருப்பாளர்களை எச்சரிக்கை செய்யுமாறும் காவல்துறையை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளனர்.