அமீரக செய்திகள்

துபாய்: ரமலான் முழுவதும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு 40,000 உணவுகள், 500 நோல் கார்டுகளை வழங்கும் RTA..!!

இந்த புனித ரமலான் மாதத்தில் பசித்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கவும், வறுமையில் வாடும் மக்களுக்கு ஆதரவு அளிக்கவும் மற்றும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அற்புதமான திட்டத்தை அறிவித்துள்ளது.

RTA வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரமலான் மாதம் முழுவதும் சுமார் 40,000 உணவுகள் மற்றும் 500 நோல் கார்டுகள் இலவசமாக வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பஸ் டிரைவர்கள், தொழிலாளர் முகாம்களில் வசிக்கும் தொழிலாளர்கள், டெலிவரி பைக் டிரைவர்கள், டிரக் டிரைவர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்கள் ஆகியோர் பயனடையலாம்.

இந்த திட்டம் குறித்து RTA மார்க்கெட்டிங் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் ரவுடா அல் மெஹ்ரேசி என்பவர் கூறுகையில், புனித ரமலான் மாதத்தில் தொழிலாளர்கள், ஏழைகள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் வயதானோர் என அனைவரும் பலன்பெறும் வகையில் ‘மீல்ஸ்-ஆன்-வீல்ஸ் (Meals on Wheels)’ என்ற மனிதாபிமான திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 1,330 உணவுகள் என்ற விகிதத்தில் 40,000 உணவுகளை இம்மாதம் முழுவதும் விநியோகிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை, எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் அத்தாரிட்டி, எமிரேட்ஸ் நேஷனல் ரெட் கிரசென்ட் அத்தாரிட்டி, ENOC எண்ணெய் நிறுவனம், டோக்கியோ மரைன் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாயில் RTA வுடன் இணைந்து அல்-இஹ்சான் தொண்டு நிருவனம் ‘ரமலான் அமான்’ எனும் பிரச்சாரம் மூலம், ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியோருக்கு இப்தார் உணவை கடந்த ஒன்பது ஆண்டுகளாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் சாலைகளில் வேகமாக செல்பவர்கள்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் அல்-இஹ்சான் தொண்டு நிருவனம் நடத்தி வருகிறது.

அதேபோன்று பீட் அல் கைர் சொசைட்டி எனும் அமைப்பும் RTA வுடன் இணைந்து துபாயின் முஹைஸ்னா பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் தங்குமிடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இப்தார் உணவுகளை விநியோகிக்க ஒரு கூடாரத்தையும் அமைத்துள்ளது.

மேலும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நிவாரணத்திற்கான எமிரேட்ஸ் சொசைட்டியுடன் இணைந்து, ரமலான் உணவுகள், கிஸ்வத் அல் ஈத், இப்தார் உணவுகள் மற்றும் முதியோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 500 ப்ரீபெய்ட் நோல் கார்டுகளை RTA விநியோகிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!