அமீரக செய்திகள்

UAE: கொரோனாவின் தற்போதைய அலையும் கடந்து விடும்.. மக்களுக்கு உறுதியளிக்கும் அபுதாபி இளவரசர்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாக கொரோனா தொற்றானது அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி தினசரி 2,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமீரகத்தில் நிலவும் தற்போதைய கொரோனா அலை, முந்தையதைப் போலவே கடந்து சென்று விடும் என்று அபுதாபி பட்டத்து இளவரசர் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், பல ஷேக்குகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அவர், “கொரோனா பல்வேறு அலையாக பரவுகிறது. தற்போதைய அலை அபாயகரமானது இல்லையென்றாலும் வேகமாக பரவுகிறது. இது வேகமாக பரவி வருவதால் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நமது ஆரோக்கியத்தைப் பேணுவதும், நமது குடும்பங்களைப் பாதுகாப்பதும், சமூக இடைவெளியைப் பேணுவதும் நமக்கு முக்கியம்” என கூறியுள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, முக கவசம் அணிதல் மற்றும் சமூக விலகல் போன்ற அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சமூக உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் “நான் ஒரே நேரத்தில் எச்சரிக்கவும் உறுதியளிக்கவும் விரும்புகிறேன். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்று எச்சரிக்கவும், எங்களுக்கு கிடைத்த அறிவியல் உண்மைகளின்படி வைரஸ் பலவீனமடைகிறது என்பதை உறுதிப்படுத்தவும் விரும்புகிறேன்”.

“இறைவனின் நாட்டத்துடன், கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இப்போதும் நாம் அதை முறியடித்து மீண்டு வருவோம். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஒரே வேண்டுகோள். மேலும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா அதிகம் பரவி வருவதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது மற்றும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதில் பூஸ்டர் டோஸ் செலுத்துதல், கிரீன் பாஸ் செயல்முறை போன்றவை அடங்கும். மேலும் சில கல்வி நிறுவனங்கள் ஜனவரியில் குளிர்கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் இரண்டு வாரங்களுக்கு தொலைநிலைக் கற்றலுக்கு மாறும் என்று தெரிவித்துள்ளதும் அபுதாபி புதிய எல்லை சோதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான திறனைக் குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!