அமீரக செய்திகள்

UAE: 400 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக பயிரிடப்பட்ட கோதுமை பயிர் அறுவடை.. பெருமிதத்துடன் பார்வையிட்ட ஷார்ஜா ஆட்சியாளர்!!

அமீரக சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள் கடந்த நவம்பர் 30, 2022 பல்வேறு கட்டங்களை உள்ளடக்கிய கோதுமை பயிரிடுதலின் முதல் கட்டத்தைத் தொடங்கி கோதுமை பயிர்களை பயிரிட்டார். தற்பொழுது அந்த பயிர்களானது அறுவடை செய்யப்பட்டுள்ளது.

ஷார்ஜாவின் மலிஹாவில் உள்ள இந்த கோதுமைப் பண்ணையின் முதல் கட்ட அறுவடையில் கலந்து கொள்வதற்காக, சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்கள் வருகை தந்துள்ளார். அவரது வருகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் பலகையைத் திறந்து வைப்பது, உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசுவது மற்றும் கோதுமை அறுவடை செய்யப்படுவதைக் கவனிப்பது போன்ற காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.

ஷார்ஜாவின் நகரங்கள் மற்றும் பிராந்தியங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவுத் தேவைகளை வழங்கவும் உற்பத்தி விகிதங்களை உயர்த்தவும் மலிஹாவில் உள்ள கோதுமைப் பண்ணை கடந்த நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்டுள்ளது.

அப்போது  400 ஹெக்டேர் பண்ணையில் கோதுமை விதைகளை விதைத்து துவங்கி வைத்த ஆட்சியாளர் காசிமி, கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வயலுக்குச் சென்று பார்வையிட்டபோது, ஆட்சியாளரால் விதைக்கப்பட்ட விதைகள் கோதுமை மணிகளைத் தாங்கி அதன் முதல் அறுவடைக்கு காத்திருந்ததைப் பார்வையிட்டுள்ளார்.

மூன்று கட்டங்களாக சாகுபடி திட்டம் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டம் 400 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், 2024-இல் இரண்டாம் கட்டம் 880 ஹெக்டேர் பரப்பளவிலும், 2025-ல் மூன்றாம் கட்டம் 1,400 ஹெக்டேர் பரப்பிலும் நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 13 மீட்டர் நீளமுள்ள நீர்ப்பாசன எந்திரங்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக பயன்படுத்தப்படும்,​​அதிநவீன நீர்ப்பாசன நிலையமானது நாள் முழுவதும் 60,000 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட ஆறு பெரிய உறிஞ்சும் பம்புகள் மூலம் கோதுமை பண்ணைக்கு தண்ணீர் வழங்குவதாகவும் அத்துடன் ஹம்தா நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் கன்வேயர் லைன் மூலம் பண்ணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!