அமீரக செய்திகள்

விசாவில் இருந்த சிறு பிழையால் துபாய் பயணிக்க இருந்த 22 பேரின் பயணம் ரத்து..!! பயண ஆவணங்களை இருமுறை சரிபார்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்…

இந்தியாவில் இருந்து 22 பேர் கொண்ட குழு ஈத் அல் பித்ர் விடுமுறையைக் கொண்டாட துபாய்க்குச் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு விசா வழங்கிய ஏஜென்ட் செய்த சிறிய தவறு காரணமாக திடீரென விமான நிலையத்திலிருந்து அவர்கள் அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் துபாய்க்கு பயணிக்க இருந்த அவர்கள் அனைவரும் தங்களின் பயணத்தை அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து டிராவல் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், பயணிகளில் ஒருவரான அபிஷேக் என்பவரின் பிறந்த தேதியும் பாஸ்போர்ட்டும் விசாவும் பொருந்தவில்லை. அதாவது பயணியின் பிறந்த ஆண்டு 1983 என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் தவறுதலாக 1988 என அச்சிடப்பட்டுள்ளது. இதனால் முழு குழுவும் தங்கள் குழுவில் ஒரு உறுப்பினரை மட்டும் விட்டு செல்ல விருப்பமில்லாததால் பயணத்தை அடுத்த நாள் ஒத்திவைக்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அபிஷேக், அந்த விசாவை ஒரு இந்திய ஏஜென்ட் மூலம் பெற்றுள்ளதாகவும் டிராவல் நிறுவன உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வை அடுத்து பாஸ்போர்ட், டிக்கெட்டுகள் மற்றும் விசா வழங்கப்பட்டவுடன் அவற்றில் உள்ள அனைத்து விவரங்களையும் இருமுறை சரிபார்க்கும்படி டிராவல் ஏஜென்டுகள் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பயணிகளின் ஒவ்வொரு தரவுகளும் அவர்களின் பாஸ்போர்ட்டின் அடிப்படையில் வழங்கப்படும் வேளையில், சில சமயங்களில் திரு அல்லது திருமதி என்ற முதலெழுத்துக்களைப் பயன்படுத்துவதிலும் பிழை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் ஒரு சில பெயர்கள் இருபாலருக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஒரு பயணி பயணிக்க அனுமதிக்கப்படாமல் போகலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

இதுபோலவே, தேரா பகுதியை சேர்ந்த தொழிலதிபரான அஃப்தாப் ஹுசைன் என்பவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பை விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் கவுண்டரில் அவரது பெயரில் எழுத்துப்பிழை இருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி, ஆன்லைன் வழியாக அவரது டிக்கெட்டை அவரே முன்பதிவு செய்துள்ளார். பாஸ்போர்ட்டில் அவரது பெயரில் ஒரு ‘s’ இருந்த போதிலும் அவர் அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளிலும் ‘ss’ ஐப் பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு சிறிய பிழையாகத் தோன்றினாலும், அவரது பெயர் பொருந்தாதால் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்க முடியாது என்று விமான ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த இக்கட்டான நிலையில் பஎன்ன செய்வது?

சித்திக் டிராவல்ஸின் உரிமையாளரான தாஹா சித்திக் என்பவர், தனது வாடிக்கையாளர்களில் ஒரு சிலர் இந்த மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளார். அவர்களில் பலர் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்வதாகவும்,  சில நேரங்களில் அவசரத்தில் தங்கள் சொந்த பெயர்கள் அல்லது தேதிகளில் தவறுகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏஜென்சியில் உள்ள ஏஜென்டுகள் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​உறுதிப்படுத்தும் முன் தகவலை இரண்டு முறை சரிபார்க்கிறார்கள் என்று சித்திக் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், பயணிகள் புறப்படும் நேரத்திற்கு 6 முதல் 8 மணி நேரத்திற்கு முன்னதாக ஏஜென்டுகளிடம் தெரிவித்தால், ஏர்லைன்ஸ் மூலம் எழுத்துப்பிழைகளை சரி செய்ய முடியும் என்றார்.

அதேசமயம், விசாவில் எழுத்துப் பிழை ஏற்பட்டால், பயணத்தை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒத்திவைக்க நேரிடும் என்று கூறிய சித்திக், விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் அனைத்து பயண ஆவணங்களையும் இருமுறை சரிபார்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவங்கள் நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே, சிறிய எழுத்துப் பிழை கூட பெரும் தலைவலியையும் விமானப் பயணத்தில் தாமதத்தையும் ஏற்படுத்தும் என்பதை பயணிகள் உணர வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!