அமீரக செய்திகள்

UAE: டிராஃபிக் இல்லாத பயணத்திற்கு தயாராகும் துபாய்.. புதிய கொள்கைக்கு துபாய் இளவரசர் ஒப்புதல்..!!

துபாயில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் நோக்கில் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் நெகிழ்வான வேலை நேரம் மற்றும் தொலைதூர பணி கொள்கைகளை செயல்படுத்துவதை விரிவுபடுத்தும் புதிய போக்குவரத்து திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது உலக வர்த்தக மையத்தில் நடந்த அரேபிய பயணச் சந்தையில்  நிர்வாகக் கவுன்சில் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய போது இந்தத் திட்டமானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கொள்கை, சட்டம் மற்றும் அரசு சேவைகளை வடிவமைப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான கொள்கைக்கும் நிர்வாக கவுன்சிலால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புதன்கிழமை (மே 8) எமிரேட்டின் நிர்வாகக் கவுன்சிலால் (Executive Council) அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய போக்குவரத்து திட்டத்தின் கீழ், துபாய் முழுவதும் பயண நேரத்தை 59 சதவீதம் வரை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், அதில் பொது பேருந்து வழித்தடங்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 2025 மற்றும் 2027 க்கு இடையில் பொதுப் பேருந்துகளுக்கான பிரத்யேக பேருந்து பாதைகளின் நெட்வொர்க்கை 20 கிமீக்கு மேல் விரிவுபடுத்துவதற்கான திட்டத்தையும் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த புதிய திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களை பள்ளிப் பேருந்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் கொள்கையை உருவாக்குவதும் அடங்கும் என தெரிகிறது. இதனால் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஓட்டத்தை 13 சதவிகிதம் மேம்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து RTA அதிகாரிகள் வெளிட்ட அறிக்கையில், “சமூகத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் மிகவும் நெருக்கமாகச் சீரமைப்பதன் மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும், இது மேம்பட்ட பொது ஈடுபாட்டின் மூலம் அடையாளம் காணப்படும். அனைத்து துபாய் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை இந்த கொள்கை எளிதாக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் எப்படி அல்லது எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் ஏதும் தற்போது வெளியாகவில்லை. இந்நிலையில், நெகிழ்வான வேலை நேரங்கள் மற்றும் தொலைதூர வேலை எந்த அளவிற்கு போக்குவரத்தை எளிதாக்க உதவும், குறிப்பாக பீக் ஹவர்ஸில் எப்படி இருக்கும் என்பது பற்றிய தரவுகளை சேகரிக்க, தனியார் ஊழியர்களிடம் ஒரு விரிவான கணக்கெடுப்பையும் RTA ஏற்கனவே தொடங்கியுள்ளது.

துபாயில் உள்ள பெருவாரியான அலுவலகங்கள், அவசர காலங்களில் ஊழியர்களுக்கு தொலைதூர வேலையைச் செயல்படுத்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. எவ்வாறெனில், கடந்த ஏப்ரல் நடுப்பகுதியிலும் மே மாத தொடக்கத்திலும் பெய்த கனமழைக்குப் பிறகு, தனியார் மற்றும் அரசுத் துறை அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கின, மேலும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துபாயில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தனியார் ஊழியர்களிடம் கருத்து கேட்கும் RTA.. பங்கேற்பாளர்கள் பரிசும் வெல்லலாம்..!!

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!