அமீரக செய்திகள்

அமீரகத்தில் இரண்டரை வருடங்களுக்கு பின் சமூக இடைவெளியின்றி தொழுகை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அவை இன்று (செப்டம்பர் 28) முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரசு அறிவித்துள்ள தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதில் ஒன்றாக மசூதிகள், கோயில்கள், சர்ச் உள்ளிட்ட இடங்களில் இனி சமூக இடைவெளி தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின் மசூதிகளில் வழிபாட்டாளர்கள் சமூக இடைவெளியின்றி தொழுகையை மேற்கொண்டுள்ளனர். முதலில் கடந்த 2020 ம் ஆண்டு அமீரகத்தில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததையடுத்து வீட்டிலேயே தொழுது கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் சிறிது காலம் கழித்து மசூதிகளில் தொழுக அனுமதிக்கப்பட்டாலும் 2 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு இது 1.5 மீட்டராக குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் ஒரு மீட்டராக இது குறைக்கப்பட்டுள்ளது.

மசூதிகளைப் போன்றே கோயில்கள் மற்றும் சர்ச்சிலும் சமூக இடைவெளியானது இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி நீக்கப்பட்டபோதிலும் மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமீரக அரசின் இந்த அறிவிப்பால் இரண்டரை வருடங்களுக்கு பின் கொரோனா காலத்திற்கு முன் எப்போதும் இருந்தது போல சமூக இடைவெளியின்றி தொழுக முடிந்தது என குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அல் ஹோஸன் அப்ளிகேஷனின் செல்லுபடி காலம் நீட்டிப்பு, விமானங்களுக்குள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை போன்ற மற்ற தளர்வுகளையும் அமீரக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!