துபாய்: பாம் ஜுமேராவில் 71 மாடிகளைக் கொண்ட புதிய ஆடம்பர குடியிருப்பு கட்டிட திட்டத்தை அறிமுகம் செய்த நக்கீல்..!!
துபாயின் மிகவும் பிரபலமான பாம் ஜுமேராவில் உள்ள ரியல் எஸ்டேட் வரிசையில் Como Residences என்ற புதிய குடியிருப்புக் கட்டிடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனமான நக்கீல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரத்தியேக மற்றும் விரிவான பிரீமியம் வசதிகளுடன் ஆடம்பரமான வாழ்க்கை அனுபவங்களை அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 71 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டிடம், 300 மீ உயரத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், 2 முதல் 7 படுக்கையறைகள் கொண்ட 76 குடியிருப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த கோமோ ரெசிடன்ஸ் கோபுரத்தில், ஒரு விசாலமான டூப்ளக்ஸ் பென்ட்ஹவுஸ் (duplex penthouse) மற்றும் தனியார் மணல் கடற்கரை, 25-மீ நீச்சல் குளம் மற்றும் கட்டிடத்தின் உச்சியில் நீச்சல் குளம் போன்ற ஆடம்பரமான வசதிகள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வீடுகளைப் பொறுத்தவரை, ஹாலில் (living rooms) ஹை சீலிங், வெப்ப காப்பு செய்யப்பட்ட ஜன்னல்கள் (thermally insulated windows) மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த குடியிருப்புகளில் ஆடம்பர அலங்காரங்கள், மற்றும் ஏராளமான இடவசதியுடன் இருக்கும் என்றும் மூன்று படுக்கையறைகள் தோராயமாக 10,000 சதுர அடி பரப்பளவில் உட்புற மற்றும் வெளிப்புற இடத்தைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக பேடல் கோர்ட்டுகள் (padel courts), ஸ்குவாஷ் கோர்ட்டுகள் (squash courts), ஜிம்னாசியம், ஸ்பா மற்றும் ஆரோக்கிய மையம் மற்றும் கட்டிட உச்சியில் 360 டிகிரி காட்சித்தளம் ஆகியவை கொண்ட ஒரு சிறப்பு இடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுமையான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் துபாய் மற்றும் அரபிக்கடலின் 180° முதல் 360° காட்சிகளை பால்கனியில் சுற்றிக் கொண்டு முழுமையாகப் பார்க்க முடியும் என்று நக்கீல் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ராஷா ஹசன் அவர்கள் பேசுகையில், பாம் ஜுமேராவில் இந்த திட்டத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும், நக்கீல் போர்ட்ஃபோலியோவில் கோமோ ரெசிடென்ஸ்கள் ஒரு முக்கிய பிளஸ்ஸாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மிகச் சிறந்த வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களுடன் குடியிருப்பாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரத்யேக வாழ்க்கை முறையை இது வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.