அமீரக செய்திகள்

ஷார்ஜாவின் முக்கிய சாலைகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வேக வரம்பு பலகைகள்!! – உங்கள் வேகத்தைக் கண்டு சிரிக்கும் மற்றும் முகம் சுளிக்கும் புதிய எமொஜிகள்…

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) நகரத்தின் முக்கிய சாலைகளில் ஸ்மார்ட் வேகவரம்பு பலகைகளை நிறுவுவதன் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, பள்ளி மண்டலங்கள் (School Zone), குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் அனைவரது பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் வகையில் ஸ்மார்ட் பலகைகள் SRTA ஆல் நிறுவப்பட்டுள்ளன.

இதுபற்றி SRTA வெளியிட்டுள்ள வீடியோவின் படி, வேகம் கண்டறியும் ஸ்மார்ட் அமைப்பு, சாலையில் கடந்து செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கண்டறிந்து, வாகனம் வேக வரம்பிற்குள் இருந்தால், சரியான வேகம் பச்சை நிறத்தில் சிரிக்கும் எமோஜியுடனும், வேக வரம்பை மீறினால் சிவப்பு நிறத்தில் சோகமான எமோஜியுடனும் காட்டப்பட்டு, வேகத்தைக் குறைக்குமாறு ஓட்டுநரை எச்சரிக்கிறது.

ஷார்ஜாவின் இந்த புதிய முயற்சியானது, வாகன ஓட்டிகளின் வேகவரம்பு குறித்து எச்சரிப்பதன் மூலம், விபத்துகளின் அபாயத்தை கணிசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமீரகத்தை பொருத்தவரை பள்ளி மண்டலங்களில் வேக வரம்புகள் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரையிலும், குடியிருப்புப் பகுதிகளில் வேக வரம்புகள் மணிக்கு 25 முதல் 40 கி.மீ வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகன ஓட்டிகள் வரம்பை மீறும் வேகத்தைப் பொறுத்து 300 முதல் 3,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமோஜி வேக அறிகுறிகள்:

வேக வரம்பை மீறினால் விபத்துகள் ஏற்பட்டு மாணவர்களிடையே காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில், 40 கி.மீ வேக வரம்புள்ள பள்ளி மண்டலங்களில் இருக்கும் சாலைகளில் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பள்ளி மண்டலங்களில் இதே போன்ற ஸ்மார்ட் அடையாளங்களை நிறுவியது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இந்த எமோஜிகள் தனிப்பட்ட ஒவ்வொரு ஓட்டுநர்களின் வேக வரம்பைக் காட்டுவதால், சாலையில் இன்னும் கவனமாகவும் நிதானமாகவும் வாகனத்தை ஓட்ட ஊக்கமளிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

உளவியல் ரீதியாக தாக்கம்:

தனிப்பட்ட ஒரு நபர் செய்யும் தவறான செயலை மற்ற சாலைப் பயனர்களிடம் காட்டுவதில் பொது அவமானம் இருப்பதால், வேக வரம்பை மீறுபவர்கள் சிவப்பு நிற எமோஜியை பார்த்தவுடன் உடனே வேகத்தை குறைத்து குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் வாகனத்தை செலுத்துவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பச்சை நிற சிரிக்கும் முகத்தைப் பார்க்கும் போது அது ஓட்டுநர்களிடம் உளவியல் ரீதியாக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், முகம் சுளிக்கும் அல்லது புன்னகைக்கும் எமோஜியை பார்த்தவுடன், ஓட்டுநர்கள் உடனடியாக விழிப்புடன் இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!